அதிகரிக்கும் சைபர் குற்றங்கள் – டிஐஜியை நியமிக்க தீர்மானம்!
சைபர் குற்றங்கள் தொடர்பாக சுமார் 25 முறைப்பாடுகள் தினமும் பதிவாகுவதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான குழுநிலை விவாதத்தில் இன்று (20) பங்கேற்று உரையாற்றும் போது அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், பெரும்பாலான முறைப்பாடுகள் வடக்கு மாகாணத்தில் இருந்து பதிவாகுவதாக தெரிவித்தார்.
2020 ஆம் ஆண்டில் வடக்கு மாகாணத்தில் 24 சைபர் குற்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்றும், அதைத் தொடர்ந்து 2021 இல் 577 முறைப்பாடுகளும், 2022 இல் 654 முறைப்பாடுகளும், 2023 இல் 472 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.
அதேநேரம் கடந்த வருடத்தில் (2024) 1,539 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், 2025 அக்டோபர் 31 வரை 2,368 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நாட்டின் பல மாவட்டங்களில் குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) கீழ் கணினி குற்றப் புலனாய்வு துணைப் பிரிவுகள் நிறுவப்பட்டுள்ளன என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில் இலங்கை காவல்துறை விரைவில் சைபர் குற்றங்களுக்குப் பொறுப்பான ஒரு டிஐஜியை நியமிக்கும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.




