ராஃபாவில் அதிகரித்த போர் நடவடிக்கை ;இஸ்ரேலுக்கும் செல்லும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
காசா மீது இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், நாளை இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சல்லிவன் வருகை தர இருக்கிறார். இதனால், இஸ்ரேலின் தாக்குதலின் தீவிரம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் சமீபத்தில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் ஐ நா பணியாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். எனவே உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று உலக நாடுகள் தீவிரமாக வலியுறுத்த தொடங்கின. இது வரை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்காவும் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
இந்த போரை எதிர்த்தும், போரில் இஸ்ரேலுக்கு ஆதரவான அமெரிக்காவின் நிலைப்பாட்டை எதிர்த்தும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் போராட்டங்கள் சூடுபிடித்துள்ளன. அமெரிக்காவை அடுத்து மாணவர் போராட்டம் லண்டன், பாரிஸ் என ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது.
இந்நிலையில் எல்லை பகுதியான ராஃபாவில் லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் தஞ்சமடைந்துள்ளனர். இந்த பகுதியில் இஸ்ரேல் தாக்குதலை தற்போது தொடங்கியுள்ளது.
இங்கு மொத்தம் 10-15 லட்சம் பாலஸ்தீன மக்கள் இருக்கிறார்கள். இவர்கள் இங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் வலியுறுத்தி வருகிறது. ஆனால் தற்போது வரை வெறும் 3 லட்சம் பேர் மட்டுமே வெளியேறியுள்ளனர். ஆனால் இவற்றை கண்டுக்கொள்ளாமல் இஸ்ரேல் போரை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த பின்னணியில்தான் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சல்லிவன் நாளை இஸ்ரேல் வர இருக்கிறார்.
ராஃபா எல்லையில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. இஸ்ரேலுக்கு வழங்கி வந்த ஆயுதங்களில் முக்கிய ராக்கெட்டுகளையும் அமெரிக்கா நிறுத்தியிருந்தது. போர் மேலும் நீடித்தால், விளைவுகள் மோசமாகும். அதில் அமெரிக்கா தலையிடாது என்றும் கூறியிருந்தது. ஜாக் சல்லிவன் இஸ்ரேலுக்கான வருகை தாக்குதலின் தீவிரம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சல்லிவன், இஸ்ரேலின் பிரதமர், பாதுகாப்புத்துறை அமைச்சர் என முக்கிய தலைவர்களை சந்திக்கிறார்