உலக அளவில் சீனியின் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு
உலக அளவில் சீனியின் விலை பாரிய அளவுக்கு அதிகரித்துள்ளது.
கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவு விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. El Nino பருவநிலை மாற்றத்தால் இந்தியா, தாய்லந்து போன்ற நாடுகளில் சீனி உற்பத்தி குறைந்துள்ளதே அதற்குக் காரணம் என்று உணவு, வேளாண்மை நிறுவனம் தெரிவித்தது.
உலகில் உணவுப் பொருள்களின் விலை கடந்த மாதம் (செப்டம்பர் 2023) சீராக இருந்தது. ஆனால் ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் செப்டம்பரில் சீனியின் விலைக் குறியீடு 9.8 விழுக்காடு உயர்ந்ததாக நிறுவனம் கூறியது.
2010ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவான ஆக அதிக சதவீதம் அதிகமாகும். அனைத்துலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றமும் சீனி விலை உயரக் காரணம் என்று நிறுவனம் கூறியது.
சராசரியாக 2 முதல் 7 ஆண்டுக்கு ஒருமுறை ஏற்படும் El Nino பருவநிலை மாற்றம் 12 மாதங்கள் வரை நீடிக்கக்கூடியது. தற்போதைய El Nino பருவநிலை மாற்றம் கடந்த ஜூலை மாதம் தொடங்கியது.
இப்பருவநிலை மாற்றத்தால் மத்திய, கிழக்கு வெப்பமண்டலப் பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பமடையும். மழைப்பொழிவு குறையும். நிலம் வறண்டு கரும்பு விளைச்சல் பாதிக்கப்படும்.