வேலை விசாவில் UKவிற்கு வருகை தருபவர்கள் தஞ்சம் கோருவது அதிகரிப்பு!
பிரித்தானியாவில் புகலிட விதிகள் கடுமையாக்கப்பட்டு வருகின்ற நிலையில், கடந்த ஆண்டில் (2024) வேலை விசாவில் வருகை தந்த 13000இற்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் தஞ்சம் கோரியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் வேலை மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்காக வருகை தருபவர்கள் பின்பு தஞ்சம் கோருவது கடுமையாக அதிகரித்து வருவதாக உள்துறை அலுவலகத்தின் புதிய புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.
அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களின்படி, வேலை விசாவில் பிரித்தானியாவிற்கு வருகை தந்த 13427 பேர் தஞ்சம் கோரியுள்ளனர். இது முந்தைய ஆண்டில்(2023) 9392 காணப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜுலை முதல் செம்டம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை நான்காயிரத்தை கடந்துள்ளதாகவும் அடிகோடிட்டு காட்டப்பட்டுள்ளது.
முந்தைய காலப்பகுதியில் ஒட்டுமொத்தமாக விசா அல்லது பிற அனுமதி பத்திரங்களின் ஊடாக 41500இற்கும் குறைவானவர்களே பிரித்தானியாவிற்கு வருகை தந்ததாகவும், ஆனால் இது கடந்த ஆண்டில் (2024) 38 சதவீதம் அதிகரித்து 1 இலட்சத்து 10 ஆயிரத்தைக் கடந்துள்ளதாகவும் புதிய புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.





