இலட்சியத்தை வெல்ல புலிகளுக்கு இனியாவது வாய்ப்புத்தாருங்கள் – புலம்பெயர் உறவுகளிடம் கோரிக்கை
தமிழ்மக்கள் இலட்சியத்தை வெல்ல இனிமேலாவது போராளிகளை ஆதரிக்க வேண்டும் என புணர்வாழ்வழிக்கப்பட்ட தமிழ் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா தெரிவித்தார்.
வவுனியாவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
தமிழ் மக்களுக்கான அரசியல் ரீதியான போராட்டம் 75 வருடங்களையும் தாண்டி நிற்கின்றது. ஆனால், இதுவரை எமது அரசியல் ரீதியான அபிலாசைகளை வென்றெடுத்துள்ளோமா என்ற கேள்வியும், இனியும் வென்றெடுக்க முடியுமா என்ற சந்தேகமுமே இருக்கின்றது.
காலாகாலமாக சிங்களப் பேரினவாதம் எம்மை ஏமாற்றியதை விட எமது வாக்குகளால் வந்த தமிழ் அரசியல்வாதிகளே இன்று எமது மக்களைக் கூறு போட்டு சின்னாபின்னமாக்கி, அரசியால் அநாதைகளாக்கி, இன்று மக்களே வீதியில் இறங்கி போராடுமளவிற்கு ஏமாற்றத்துக்குள்ளாக்கி இருக்கின்றார்கள்.
எமது தேசியத் தலைவரின் 35 வருடங்களுக்கு மேலான ஆயுதப் போராட்டத்தில் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக நாமும் இணைந்து போராடியிருக்கின்றோம்.
நாங்கள் எமது தேசியத் தலைவரோடு தோளோடு தோள் நின்று மரணித்த மாவீரர்களின் இலட்சியப் பாதையின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக இன்று ஜனநாயக ரீதியில் போராட்டத்தை முன்னெடுப்பதற்குத் துணிந்துள்ளோம்.
போராட்டத்தையும், போராளிகளையும் வைத்து அரசியல் செய்யும் எமது அரசியல்வாதிகள் இன்று சுகபோக வாழ்வை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
மனைவி பிள்ளைகளை வெளிநாடுகளில் பாதுகாப்பாக இருத்திவிட்டு இங்கு அரசியலுக்காக மாத்திரம் அவர்கள் செயற்படுகின்றார்கள்.
இவ்வாறான அரசியல்வாதிகள் இதுவரை தங்களுக்கான சொத்துக்களைச் சேர்த்தார்களே தவிர எமது மக்களுக்கு எள்ளளவிலான எந்தவொரு விடயத்தையும் முன்னெடுக்கவில்லை.
இந்தநிலையில்தான் ‘கொண்ட இலட்சியம் கொண்டதான கொள்கை வீரனின் காலடி மண்ணிலே நின்று போர்க்கொடி துக்கிய போராளிகள்’ எமது தேசியத் தலைவருக்கு எந்தவிதத்திலும் துரோகமிளைக்காமல் 2009 இறுதி வரைக்கும் உறுதியாக நின்று வந்த போராளிகள் நாங்கள். அதே வழியில் இன்று ஜனநாயக ரீதியில் எமது மக்களுக்காக முன்வந்துள்ளோம்.
புலம்பெயர் உறவுகள் இதனை நன்கு விளங்கிக் கொள்ளவேண்டும். நீங்கள் தாயகத்திலுள்ள உறவுகளிடம் முன்னாள் போராளிகளுக்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்.
எதிர்வருகின்ற தேர்தல்களில் எமது காவல் தெய்வங்களாக நின்ற போராளிகளுக்கு வாய்ப்பை வழங்குவதற்கு முன்வாருங்கள். இதுவரை அரசியல் சாக்கடையாளர்களுக்குக் கொடுத்த வாய்ப்புகள் போதுமானது. அதில் சிறிய அளவிலேனும் போராளிகளை நம்பி ஒப்படையுங்கள்.
போராளிகள் மூலமே தமிழ் மக்களுக்கான விடுதலையை அடைய முடியும் என்று களத்தில் நின்று காட்டியவர்கள் நாங்கள். அரசியல் எங்களுக்குப் புதியதல்ல. புலத்திலுள்ள மக்கள் போராளிகள் மீது நம்பிக்கை வைத்து தாயக மக்களுடாக ஒரு சந்தர்ப்பத்தை வழங்குவதே மாவீரச் செல்வங்களுக்கும், தேசியத் தலைவருக்கும். போராடிய போராளிகளுக்கும் செய்கின்ற நன்றிக்கடன்.
எனவே எமது மக்கள் உங்கள் வாக்குகள் மூலம் புலிகளை உயரிய சபைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதன் மூலமே அங்கேயுள்ள எலிகளை நடுநடுங்க வைக்க முடியும்.
போராட்டத்தைக் கூறு போட்டு, இலட்சியத்தை மண்ணோடு மண்ணாக்கிக் கொண்டு ஒரு நாடு இரு தேசம் என்ற போலி வேடங்களை அணிந்து இறுதி யுத்தத்தின் ஒரு சாட்சியங்களைக் கூட வெளிநாடுகளுக்குச் சென்று சொல்லாத தேசியவாதிகள் இன்று சமஸ்டி என்று இந்தியாவின் காலடியிலும், ஒரு நாடு இரு தேசம் என்று புலம்பெயர் தேசங்களுக்கும் சென்று வருகின்றார்கள்.
இன்று தேசியம் பேசும் அத்தனை பேரும் எமக்குத் துரோகம் செய்தவர்களே. நாங்கள் மீண்டும் மீண்டும் எமது மக்களிடம் கேட்பது போராளிகளுக்கான வாய்ப்பினைத் தரவேண்டும்.
காலாகாலமாகப் புலிகள் அரசியல் ரீதியாகத் தோற்றுப் போகும் விடயம் நடக்கக் கூடாது. இவ்வாறு தோற்பது எதிரிகளுக்கே வெற்றி. இதன் மூலம் விடுதலைப் புலிகளை மக்கள் இன்று ஏற்றுக் கொள்ளவில்லை என்பதாகவே வெளிப்படுத்துவார்கள்.
அதன்மூலம் புலிகள் மக்கள் அமைப்பு என்பதைத் தாண்டி ஒரு பங்கரவாத அமைப்பு என்ற நிலைப்பாட்டுக்கு இன்னும் உறுதித் தன்மையை ஏற்படுத்தப்பட்டு விடும்.எனவே புலம்பெயர்ந்த உறவுகளே, உங்களது ஆலோசனைகள், நிதியுதவிகள், மக்கள் ஆதரவுகள், போராளிகளுக்குத் தேவை. இந்த முறை நீங்கள் எமக்கு வழங்கும் ஆதரவின் மூலமே நாங்கள் ஒரு வெற்றியைக் காணலாம்” என்றார்.





