இந்தோனேஷியாவில் அடிக்கடி கேள்வி கேட்ட பக்கத்துவீட்டு முதியவர்… கட்டையால் அடித்தே கொன்ற 45வயது நபர்!
இந்தோனேசியாவில் 45 வயது நபர் ஒருவர், ’ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை’ என நச்சரித்த பக்கத்து வீட்டு முதியவரை கொலை செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்தோனேஷியாவில் வசித்து வருபவர் 45 வயது நிரம்பிய சிரேகர். இவரது அண்டை வீட்டில் வசித்து வந்தவர்தான் 60 வயது முதியவரான அசிம் இரியாண்டோ. இவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் என்று கூறப்படுகிறது.
அசிம் தனது அண்டை வீட்டுக்காரரான சிரேக்கை பார்க்கும்போதெல்லாம், ”எப்போது திருமணம் செய்துகொள்ள போகிறாய்?” என்று கேட்பது வழக்கம். இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான சிரேக் கடந்த ஜுலை 29 ஆம் திகதி அன்று மிகுந்த கோபத்துடன் அசிம் வீட்டின் கதவை தட்டியுள்ளார்.
அவர்கள் திறக்காததால், மேலும், ஆத்திரமடைந்த சிரேக் வீட்டு கதவை உடைத்து, அசிமை மரக்கட்டையால் பலமாக தாக்கியுள்ளார். அசிம் தெருவில் ஓடி தப்பிக்க முயன்றுள்ளார். இருப்பினும், அவரை பிடித்து மீண்டும் பலமாக தலையில் அடித்துள்ளார் சிரேக். இதனையடுத்து, சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், சிரேக்கை தடுத்துள்ளனர்.
இதனையடுத்து, அசிமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார் என்று அசிமின் மனைவி பொலிஸாரிடத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டநிலையில், சிரேக் உடனடியாக கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், இவரை கொலை செய்ததற்கான காரணம் என்னவென்று காவல்துறையினர் சிரேக்கிடம் விசாரித்ததில், ”திருமணம் குறித்து அவர் தொடர்ந்து கேள்வி கேட்டு, என்னை கேலி செய்ததால் நான் மனதளவில் பாதிக்கப்பட்டேன். இதனால்தான், அவரை கொன்றேன். ” என்று தெரிவித்துள்ளார்.