இந்தியாவில் google map தவறாக வழிகாட்டியதால் பாலத்திலிருந்து கார் விழுந்து மூவர் பலி!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் ‘கூகல் மேப்’ தவறாக வழிகாட்டியதால் ஆற்றுப் பாலத்திலிருந்து கார் விழுந்ததில் மூவர் உயிரிழந்தனர்.
பரேலி மாவட்டத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்றிற்காக இரு சகோதரர்களும் மற்றொருவரும் காரில் சென்றனர். திருமணம் நடைபெறும் இடத்திற்குச் செல்ல ‘கூகல் மேப்’பை அவர்கள் பயன்படுத்தினர்.
‘கூகல் மேப்’ காட்டிய வழியில் கார் சென்றது. ஃபரிட்பூர் என்னுமிடத்தில் உள்ள ராம்கங்கா ஆற்றுப்பாலத்தில் போகுமாறு அந்த மேப் சொன்னது.அதன்படி, பாலத்தில் வேகமாகச் சென்றுகொண்டிருந்த கார், திடீரென்று 50 அடி உயரத்திலிருந்து தண்ணீர் இல்லாத ஆற்றுக்குள் விழுந்தது. அந்தப் பாலம் சேதமடைந்து, சரியாகக் கட்டிமுடிக்கப்படாமல் இருந்தது அப்போதுதான் தெரிய வந்தது.
உயரத்திலிருந்து விழுந்த கார் நொறுங்கியதோடு, அதிலிருந்த மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களில் இருவர் சகோதரர்கள் என்றும் அவர்களின் பெயர் விவேக், அமித் என அடையாளம் காணப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர். மூன்றாமவர் யார் என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை காலையில், ஆற்றுக்குள் கார் விழுந்து கிடந்ததைக் கண்ட உள்ளூர் மக்கள் அதுகுறித்து காவல்துறையிடம் தெரிவித்தனர்.
விரைந்து சென்ற காவல்துறையினர் மூன்று சடலங்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்தச் சம்பவம் எவ்வாறு நடந்தது என்ற விசாரணையை அவர்கள் துவக்கினர்.
“இவ்வாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாலத்தின் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டது. அது ‘ஜிபிஎஸ்’ தொழில்நுட்பத்தில் ‘அப்டேட்’ ஆகாததால், பாலத்தின் உண்மை நிலவரத்தை அது உணர்த்தவில்லை,” என்று ஃபரிட்பூர் காவல்நிலைய அதிகாரி அஷுதோஷ் ஷிவம் கூறினார்.