அமெரிக்காவில் கொள்ளைக்காரரைச் சுடுவதாகக் கனவு கண்டவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
அமெரிக்காவின் வீடு கொள்ளையடிக்கப்படுவதாகக் கனவு கண்ட நபர் ஒருவர் தன்னையே துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கியைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதாக அமெரிக்காவின் இலனோய் (Illinois) மாநிலத்தைச் சேர்ந்த நபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சம்பவம் லேக் பேரிங்டன் வட்டாரத்தில் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி நடந்தது. தூக்கத்தில் இருந்த 62 வயது மார்க் M. டிக்காரா (Mark M. Dicara) வீட்டில் யாரோ கொள்ளை அடிக்க வருவதாகக் கனவு கண்டார்.
டிக்காரா துப்பாக்கியால் ‘கொள்ளைக்காரரை’ சுட்டார். அப்போது அவர் உடனடியாகக் கண்விழித்துக் கொண்டார்.
அவரின் காலிலிருந்து ரத்தம் வழிந்தோடியது. உண்மையில் தன்னையே சுட்டுக்கொண்டதை டிக்காரா உணர்ந்தார். சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் அவருக்கு முதலுதவி அளித்தனர்.
அதிகாரிகள் டிக்காராவை மருத்துவமனையில் சேர்த்தனர். துப்பாக்கியைப் பயன்படுத்துவதற்கான உரிமத்தை டிக்காரா பெற்றிருக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.
அவர் கடந்த திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டார். பிணையில் விடுவிக்கப்பட்ட அவர் மீண்டும் இம்மாதம் 29ஆம் திகதி நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்.