முட்டைகள் தொடர்பில் தவறான தகவல்களை பரப்பினால் சட்டநடவடிக்கை!
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இலங்கை சந்தையில் விற்பனை செய்யப்படும் முட்டைகள் தொடர்பில் தவறான தகவல்களை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரச வர்த்தக இதர சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் செயற்கையாக தயாரிக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கையில் சுமார் நூறு மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த முட்டைகள் தொடர்பில் எந்தவொரு முறைப்பாடும் செய்யப்படவில்லை எனவும் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வணிகசுந்தர தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள ஆய்வகங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே முட்டைகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவதாகவும், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டதன் பின்னர் இலங்கையிலும் பரிசோதனை செய்யப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனவே, இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் தொடர்பில் நுகர்வோர் எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.