“ரஷ்யாவின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டால்” – புட்டின் விடுத்த எச்சரிக்கை!
உக்ரைன் மற்றும் மேற்கத்தேய நட்பு நாடுகள், அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ரஷ்யாவின் கோரிக்கைகளை நிராகரித்தால், மொஸ்கோ உக்ரைனில் தனது ஆதாயங்களை நீட்டிக்க முயற்சிக்கும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2022 இல் ரஷ்யா உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியது. இந்தபோர் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகாலமாக நடைபெற்று வருகிறது.
போரை நிறைவுக்கு கொண்டுவர அமெரிக்கா பல சுற்று பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது. குறிப்பாக சமீபத்தில் 28 அம்ச கோரிக்கைகளை உள்ளடக்கிய அமைதி ஒப்பந்தம் ஒன்றையும் முன்மொழிந்தது.
இருப்பினும் ரஷ்யா மற்றும் உக்ரைனின் முரண்பாடான கோரிக்கைகளால் இந்த பேச்சுவார்தை கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயர் இராணுவ அதிகாரிகளுடனான வருடாந்திர கூட்டத்தில் பேசிய புட்டின், மொஸ்கோ தனது இலக்குகளை அடைய இராஜதந்திர ரீதியிலும், மோதலின் வழியாகவும் முயற்சிப்பதாக கூறினார்.
ஆனால் எதிர் தரப்பும் அதன் வெளிநாட்டு ஆதரவாளர்களும் கணிசமான உரையாடலில் ஈடுபட மறுத்தால், ரஷ்யா இராணுவ வழிமுறைகள் மூலம் அதன் வரலாற்று நிலங்களை கையகப்படுத்தும் என உறுதிப்பட தெரிவித்துள்ளார்.





