நாடாளுமன்ற வளாகத்தில் ஐஸ் போதைப்பொருள்: தகவல் உண்மையா?
நாடாளுமன்ற வளாகத்தில் ஐஸ் போதைப்பொருள் பாவனை தொடர்பில் வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கை நாடாளுமன்ற செயலகத்தால் விசேட அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
“ நாடாளுமன்ற வளாகத்தில் போதைப்பொருள் (ஐஸ்), மதுபானம் மற்றும் சிகரெட் பயன்படுத்தும் ஊழியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க சபாநாயகர ஜகத் விக்கிரமரத்ன தீர்மானித்துள்ளார்” – என வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்தே இவ்வாறு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தின் எந்தவொரு அதிகாரிக்கும், அவ்வாறான ஆலோசனைகளையும் சபாநாயகர் வழங்கி இருக்கவில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“நாடாளுமன்ற உணவறைப் பகுதிக்குள் சில ஊழியர்கள் இரகசியமாக மதுபானம் மற்றும் சிகரெட் பயன்படுத்துவதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனையடுத்தே இது தொடர்பான ஆலோசனை சபாநாயகரால் வழங்கப்பட்டுள்ளது என வெளியாகியிருக்கும் செய்தி பொய்யானது .
அவ்வாறான சூழ்நிலை உருவாவதற்கு இடமளித்தமை தொடர்பில் சபாநாயகர் நாடாளுமன்றத்தின் உயரதிகாரிகளைக் குற்றஞ்சாட்டியிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல்களிலும் எவ்வித உண்மையும் இல்லை.” என்றும் நாடாளுமன்ற செயலகம் மேலும் வலியுறுத்தியுள்ளது.





