நெதன்யாகு மற்றும் கேலன்ட் ஆகியோருக்கு ஐசிசி பிடியாணை
பெண்கள், குழந்தைகள் உட்பட 40,000க்கும் மேற்பட்டோரை படுகொலை செய்ததற்காகவும், மருத்துவமனைகளை அழித்து போர்க்குற்றம் புரிந்ததற்காகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் ஆகியோருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐசிசி முன் விசாரணை அறை (ஒன்று) மூன்று நீதிபதிகள் ஒருமனதாக அவர்களுக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பித்தனர்.
ஐசிசி வழக்கறிஞர் கரீம் கான், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார்.
நெதன்யாகு மற்றும் கேலன்ட் மீதான நடவடிக்கை விசாரணையின் போது உள்ளது.
ஹமாஸ் தலைவர் முஹம்மது டெயிஃபுக்கு எதிராகவும் நீதிமன்றத்தில் வாரண்ட் உள்ளது.
எனினும், வான்வழித் தாக்குதலில் டெய்ஃப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியது.
இதை ஹமாஸ் இன்னும் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ளவில்லை.
காசாவில் பொதுமக்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவம் போன்ற அத்தியாவசிய சேவைகளை நெதன்யாகு மற்றும் கேலன்ட் மறுத்ததால் கடுமையான மனிதாபிமான நெருக்கடி மற்றும் குழந்தைகள் உட்பட பலரின் மரணம் ஏற்பட்டது என்று நீதிமன்றம் கண்டறிந்தது.
இருவரும் கொலை, சித்திரவதை போன்ற மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்ததாகவும், பட்டினிச் சாவை ஒரு போர் முறையாகக் கொண்டு போர்க் குற்றங்களைச் செய்ததாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.