“நான் கடைசி வரை போராடுவேன்” ;ராணுவ ஆட்சி சட்ட முடிவைத் தற்காத்துப் பேசிய தென்கொரிய அதிபர்
நெருக்குதலை எதிர்நோக்கிவரும் தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல், அரசயிலில் தமக்குப் போட்டியாக இருப்பவர்கள் தேசத் துரோகிகள் என்றும் தென்கொரியாவின் தேர்தல் விவகாரங்களில் வடகொரியா ஊடுருவியிருக்கக்கூடும் என்றும் சாடியுள்ளார்.
யூன், தென்கொரியாவில் சென்ற வாரம் ராணுவ ஆட்சி சட்டத்தை அமல்படுத்தினார். சில மணிநேரம் மட்டுமே நீடித்த அச்சட்டத்தை அமல்படுத்தத் தாம் எடுத்த முடிவை அவர் வியாழக்கிழமையன்று (டிசம்பர் 12) தற்காத்துப் பேசினார். அச்செயல், ஜனநாயக முறையைப் பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட சட்ட ரீதியான நடவடிக்கை என்று அவர் எடுத்துரைத்தார்.
“நான் கடைசி வரை போராடுவேன்,” என்று யூன் தொலைக்காட்சிவழி ஆற்றிய உரையில் எடுத்துரைத்தார். ராணுவ ஆட்சி சட்டத்தை அமல்படுத்தியதன் தொடர்பில் மேற்கொள்ளப்படும் சட்ட, அரசியல் ரீதியான விளைவுகளைத் தாம் சந்திக்கத் தயாராய் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
யூன் பதவி விலகும் அறிகுறிகள் ஏதும் தெரியவில்லை என்றும் அவர் மீது அதிகாரபூர்வத் தரப்புகள் வழக்கு தொடரவேண்டும் (impeach) என்றும் தென்கொரியாவின் ஆளும் கட்சித் தலைவர் ஹான் டோங் ஹூன் கூறியிருந்தார். அத்தகைய சூழலில் திரு யூன் இவ்வாறு சொன்னார்.