நான் நிரபராதி – சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன்
தாம் நிரபராதி எனவும் தமக்கு ஏற்பட்டிருக்கும் களங்கத்தை நீக்குவதில் இனி கவனம் செலுத்தப் போவதாகவும் சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஈஸ்வரன் மீது 27 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு கடந்த சுமார் 6 மாதங்களாக அவர் மீது விசாரணை நடத்தியது. தமக்கு எதிரான எல்லாக் குற்றச்சாட்டுகளையும் ஈஸ்வரன் மறுத்துள்ளார்.
பிரதமர் லீ சியன் லூங்கிற்கு எழுதிய கடிதத்தில் கூறியவற்றை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
இந்த நிலையில் பதவியை இராஜினாமா செய்த அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், மக்கள் செயல் கட்சி உறுப்பினர் ஆகிய பொறுப்புகளிலிருந்து விலகுவதே “சரியான” முடிவாக இருக்கும் என்று தாம் நம்புவதாக ஈஸ்வரன் சொன்னார்.
வெஸ்ட் கோஸ்ட் (West Coast) குழுத்தொகுதி குடியிருப்பாளர்களுக்கு இனிமேல் சேவையாற்ற முடியாதது தமக்கு வருத்தமளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த 26 ஆண்டுகளாக அவர்களுக்குச் சேவையாற்றியது தமக்குக் கிடைத்த பாக்கியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில மாதங்கள் எனக்கும் என்னுடைய குடும்பத்துக்கும் மிகவும் கடினமான காலக்கட்டமாக இருந்தது. என்னுடைய குடும்பம் என்னிடம் காட்டிய அன்புக்கும் ஆதரவுக்கும் நான் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன் என ஈஸ்வரன். மேலும் தெரிவித்துள்ளார்.