நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் வழங்கிய ஹைதராபாத் நீதிமன்றம்
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலுள்ள திரையரங்கில் கடந்த மாதம் புஷ்பா 2 படம் பார்க்க அல்லு அர்ஜுன் வந்திருந்தபோது, அவரைக் காணச் சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.
அவரின் 8 வயது மகன் படுகாயம் அடைந்தார். இச்சம்பவத்தில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஒருநாள் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், அல்லு அர்ஜுன் தரப்பில் வாதாடிய மூத்த வழக்குரைஞர் அசோக் ரெட்டி, அல்லு அர்ஜுன் வேண்டுமென்றே யாரையும் புண்படுத்த விரும்பவில்லை. இதற்கு முன்னதாக, ஹிந்தி திரைப்படமான ரயீஸ் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியிலும் ஒருவர் உயிரிழந்ததாக சுட்டிக்காட்டினார்.
நீதிமன்றத்தில் வாதங்கள் கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் நீடித்தன. இந்தச் சம்பவத்தில் நடிகர் மீது மட்டும் குற்றம் சாட்ட முடியாது என்று அசோக் ரெட்டி எடுத்துரைத்தார்.
“ இருவருக்கும் தலா ரூ.50,000 ஆக மொத்தம் ரூ.1 லட்சம் பிணைத் தொகையாக அளிக்க வேண்டும் என்று நீதிபதி கூறினார்” என்று வழக்குரைஞர் அசோக் ரெட்டி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.