ஒருநாள் மட்டும் கணவன், மனைவி! சீனாவில் ட்ரெண்டாகி வரும் சடங்கு திருமணம்
சீனாவில் ஒருநாள் மட்டும் கணவன், மனைவியாக வாழும் திருமண முறை அதிகரித்து வருகிறது.
ஆசிய நாடான சீனா பல விநோத நடைமுறைகளுக்கு முன்னோடியாக இருந்து வருகிறது. அந்த வகையில் ஒருநாள் திருமணம் எனும் முறை தற்போது அங்கு ட்ரெண்டாகி வருகிறது.
ஹெபெய் மாகாணத்தில் இருக்கும் கிராமங்களில் இதுபோல ஒருநாள் திருமணங்கள் அதிகரிக்க காரணம், அங்கு கடைபிடிக்கப்படும் ஒரு நடைமுறைதான்.அதாவது, ஏழ்மையில் இருக்கும் திருமணமாகாமல் ஆண்கள் உயிரிழந்தால் அவர்களின் குடும்ப கல்லறையில் புதைக்கப்படமாட்டார்கள்.
இதனால் அவர்களால் மூதாதையருடன் சொர்க்கத்தில் சேர முடியாது. இந்த பாவம் பல தலைமுறைகளுக்கு தொடரும் என்று அம்மக்கள் நம்புகிறார்கள்.இதன் காரணமாக, இறந்த பின்பும் தங்கள் மூதாதையருடன் ஒன்று சேர வேண்டும் என்றால் அனைத்து ஆண்களும் குடும்பஸ்தனாக இருக்க வேண்டும்.இம்முறையில் திருமணம் செய்துகொள்ளும் தம்பதியர், தங்களுக்கு திருமணம் நடந்துவிட்டதை மூதாதையர்களுக்கு தெரிவிக்கும் வகையில் அவர்களின் குடும்ப கல்லறைக்கு செல்வார்கள்.
உள்ளூர் பெண்கள் இப்படி ஒருநாள் திருமணம் செய்ய தயங்குவதால், வெளியூரில் இருந்து ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்து பெண்கள் பணத்திற்காக வந்து திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று கூறுகிறார் தரகர் ஒருவர்.
மேலும், திருமணமான பல பெண்களும் அவர்களின் குடும்பத்தினருக்கே தெரியாமல் இதுபோன்ற ஒருநாள் திருமணங்களை செய்து வருகிறார்கள்.இந்த திருமணங்கள் எதுவுமே சட்டப்பூர்வமானவை அல்ல, வெறும் சடங்கிற்காக மட்டுமே செய்யப்படுகின்றன. திருமணம் முடிந்த மறுநாள் நீ யாரோ, நான் யாரோ தான் என்கிறார் அவர்.