நூற்றுக்கணக்கான குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் ; பாங்காக் பள்ளி ஆசிரியருக்கு 111 ஆண்டுகள் சிறைதண்டனை
பேங்காக் பள்ளி ஒன்றின் ஆசிரியருக்கு வயது குறைந்த சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது தொடர்பான வழக்கில் பிட்சானுலோக் நீதிமன்றம் 111 ஆண்டுகள், 216 மாத சிறைத் தண்டனை விதித்துள்ளதாக அந்நாட்டு சிறப்பு புலனாய்வுத் துறை திங்கட்கிழமை (டிசம்பர் 9) அறிவித்தது.
பிட்சானுலோக் மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் கற்பித்தபோது அவர் புரிந்த குற்றத்திற்காக சிறுவனுக்கு 1.5 மில்லியன் பாட் நஷ்ட ஈடும், அவரது தாய்க்கு 650,000 பாட் செலுத்தவும் ஆசிரியருக்கு உத்தரவிடப்பட்டது.
நீதிமன்ற ஆணைப் படி முழுப் பெயர் வெளியிடப்படாத 32 வயதான டீ, ஜூன் 24ஆம் திகதி சிறுவர்களைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகிக்கப்படும் பாத்தும் தானி மாடலிங் நிறுவனத்தின் விசாரணையின் ஒரு பகுதியாக கைது செய்யப்பட்டார்.
நேனே மாடலிங் நிறுவனத்தின் உரிமையாளரான 28 வயது டானுடெட் சேங்க்கேயூவிடம் சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவதைக் காட்டும் 500,000க்கும் மேற்பட்ட படங்களை காவல்துறையினர் கண்டுபிடித்ததை அடுத்து இந்த ஆண்டுத் தொடக்கத்தில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
பிப்ரவரி 11ஆம் திகதி 60க்கும் மேற்பட்ட குற்றங்களின் பேரில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு அவருக்கு 121 ஆண்டுகள், 223 மாதச் சிறை விதிக்கப்பட்டது. புகைப்படங்களில் இருந்து அடையாளம் காணப்பட்ட எட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு 2.1 மில்லியன் பாட் நஷ்ட ஈடு வழங்குமாறும் டானுடெட்டுக்கு உத்தரவிடப்பட்டது.
விசாரணையில் டானுடெட்டும் டீயும் இணைந்து சிறுவர்களுடன் பணியாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. டீ தனது கார், ஓய்வறைகள், ஒலி-ஒளி அறை உட்பட பள்ளியில் பல இடங்களில் சிறுவர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதை ஒப்புக்கொண்டார். பாதிக்கப்பட்ட 1,000க்கும் மேற்பட்டவர்களை இருவரும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியிருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் தெரிவிக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துன்புறுத்தலுக்கு உள்ளானவர்களுக்கு நீதி வழங்கும் வகையில் புகைப்படங்களில் பாதிக்கப்பட்ட ஏனையவர்களை அடையாளம் காணும் பணியில் துறை ஈடுபட்டுள்ளது.