மனித உரிமை மீறல்கள்; ஆப்கனுடனான கிரிக்கெட் போட்டியை பிற்போட்ட ஆஸ்திரேலியா!
ஆப்கானிஸ்தானில் மனித உரிமைகள் பாதிப்படைந்துள்ளதால் அந்நாட்டுடனான கிரிக்கெட் போட்டிகளை ஆஸ்திரேலியா தள்ளி வைத்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 செப்டம்பர் முதல் தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர்களது ஆட்சியின் கீழ் பெண்கள் மற்றும் சிறுமிகளின் மனித உரிமை மோசமடைந்துள்ளதாக ஆஸ்திரேலியா கவலை தெரிவித்துள்ளது. மேலும், இதன் காரணமாக, ஆப்கானிஸ்தானுடன் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த 3 போட்டிகள் கொண்ட ஆண்கள் டி-20 சர்வதேச தொடரை ஆஸ்திரேலியா ஒத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் நிலைமை மோசமடைந்து வருவதாக அரசாங்கத்தின் ஆலோசனை கூறுகிறது. இந்த காரணத்துக்காக, நாங்கள், எங்களின் முந்தைய நிலைப்பாட்டை பராமரித்து வருகிறோம். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இருதரப்பு கிரிக்கெட் தொடரை ஒத்திவைக்கிறோம்.
அங்கு பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான மேம்பட்ட நிலைமைகளை எதிர்பார்த்து, அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தை தொடர்பு கொண்டுள்ளோம்’ எனத் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டி நிலைப்பாட்டில் அதிரடி முடிவுகள் எடுப்பதில் ஆஸ்திரேலியாவுக்கு இது புதிததல்ல. ஏற்கெனவே, கடந்த 2021 நவம்பரில் ஹோபார்ட்டில் விளையாட திட்டமிடப்பட்ட ஒரு டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ரத்து செய்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவிருந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்தும் ஆஸ்திரேலியா விலகியது குறிப்பிடத்தக்கது.