கேரளாவில் 25 ஆண்டு்ளாக கைவிடப்பட்ட வீட்டின் குளிர்சாதன பெட்டியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள்
கேரள மாநிலத்தில் 25 ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டிருந்த வீட்டில் இருந்து மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கொச்சி மாவட்டத்தின் சோட்டானிக்கரை அருகே எருவேலி பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக பராமரிக்கப்படாத வீடு பூட்டி வைக்கப்பட்டிருந்தது.சுமார் 14 ஏக்கர் நிலப்பரப்பில் அந்த இரண்டடுக்கு வீடு அமைந்துள்ளது.
அந்த பழைய வீட்டில் சமூக விரோதச் செயல்கள் நடப்பதாக பஞ்சாயத்து உறுப்பினர் இந்திரா தர்மராஜ் என்பவர் புகார் அளித்ததால், சோட்டானிக்கரை காவல்துறையினர் திங்கட்கிழமை (ஜனவரி 6) சோதனை செய்தனர்.
அப்போது பழுதான பழைய குளிர்சாதனப் பெட்டியில் மூன்று பிளாஸ்டிக் பைகளில் மனித மண்டை ஓடு, எலும்புகள் இருந்ததைக் கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.இதையடுத்து அவை மீட்கப்பட்டு தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக உள்ளூர் ஊடகம் தகவல் தெரிவித்தது.
அந்தச் சோதனைக்குப் பிறகே எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு கொல்லப்பட்ட உடலின் பாகங்கள் அவை என்பது தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் கொச்சி மாவட்டம் வைட்டிலா பகுதியில் வசிக்கும் மருத்துவர் பிலிப் ஜான், 74, என்பவருக்குச் சொந்தமான வீடு என்பது தெரிய வந்துள்ளது. இது குறித்த விசாரணைக்கு பிலிப் ஜானுக்கு காவல்துறையினர் அழைப்பாணை அனுப்பியுள்ளனர்.
வெளிநாட்டில் உள்ள பிலிப் ஜானின் மகன்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக ஒரு காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.இந்தச் சம்பவத்தை சோட்டானிக்கரை காவல் நிலையம் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.