மனிதனின் தூண்டுதல்களே ஆசிய நாடுகளில் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுக்கு காரணம்!
மனிதனால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றமே ஆசிய நாடுகளில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம் மற்றும் மண்சரிவுக்கு மூலக்காரணம் என்று பகுப்பாய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
உலக வானிலை பண்புக்கூறு நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வின்படி, வட இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட அதியுயர் வெப்பம் சூறாவளிகளுக்கு ஆற்றலைச் சேர்த்ததாக குறிப்பிட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட புயல், கடுமையான மழை, மண்சரிவு, வெள்ளம் ஆகியவை காரணமாக 1600இற்கும் மேற்பட்டோர் பலியாகியதாகவும் அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
WWA ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, வட இந்தியப் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை கடந்த மூன்று தசாப்தங்களில் இருந்த அளவை விட 0.2 டிகிரி செல்சியஸ் (0.3 டிகிரி பாரன்ஹீட்) அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புவி வெப்பமடைதல் இல்லாமல் இருந்திருந்தால், கடல் மேற்பரப்பு வெப்பநிலை தற்போது இருப்பதை விட சுமார் 1 டிகிரி செல்சியஸ் (1.8 டிகிரி பாரன்ஹீட்) குறைவாக இருந்திருக்கும் என்று பகுப்பாய்வு தெரிவிக்கிறது. கடல் வெப்பநிலை புயல்களுக்கு வெப்பத்தையும் ஈரப்பதத்தையும் அளித்துள்ளது.
தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் கூற்றுப்படி, ஒட்டுமொத்த வெப்பநிலையை அளவிடும்போது, 19 ஆம் நூற்றாண்டில் தொழில்துறைக்கு முந்தைய காலங்களில் இருந்த வெப்பநிலையை விட தற்போது உலக வெப்பநிலை 1.3 டிகிரி செல்சியஸ் (2.6 டிகிரி பாரன்ஹீட்) அதிகரித்துள்ளது.
வளிமண்டலம் வெப்பமடையும் போது, அது அதிக ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ளும். இதன் விளைவாக, காலநிலை மாற்றம் ஏற்படுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.





