இலங்கையில் பாரிய வெளிநாட்டு முதலீடு: அடுத்த மாதம் கொழும்பு வருகிறது சீன குழு!
சீனா சினோபெக் Sinopec நிறுவனத்தின் உயர்மட்ட தூதுக்குழுவொன்று அடுத்த மாதம் இலங்கை வரவுள்ளது என ஆங்கில இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நிர்மாணிக்கும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்யும் நோக்கிலேயே அக்குழு கொழும்பு வருகின்றது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த வருடம் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது அம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அமைப்பதற்குரிய புரிந்துணர்வு MOU ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
3.7 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
சீன அரசுக்குச் சொந்தமான எரிசக்தி நிறுவனமான, சினோபெக், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை உருவாக்கும் என அறிவிக்கப்பட்டது.
எனினும், சிற்சில விடயங்களால் திட்டம் தாமதித்து வந்தது.
இந்நிலையில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, அண்மையில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட போது, இவ்விவகாரம் பற்றியும் பேசப்பட்டது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே உடன்பாட்டில் கையெழுத்திடும் வகையில், சினோபெக்கின், உயர்மட்டக் குழு பெப்ரவரி முதல் வாரத்தில் இலங்கை வரவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த உடன்பாடு இறுதி செய்யப்பட்டால், சினோபெக் நிறுவனம், இலங்கையில் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீட்டைச் செய்யும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.





