பிரித்தானியாவிற்கு இடம்பெயர்பவர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி!
பிரித்தானியாவிற்கு இடம்பெயர்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 20% குறைவடைந்துள்ளதாக தேசிய புள்ளிவிவர அலுவலகத்தின் (ONS) திருத்தப்பட்ட தரவுகள் தெரிவித்துள்ளன.
நாட்டிற்குள் நுழைபவர்களுக்கும் வெளியேறுபவர்களுக்கும் இடையிலான வித்தியாசம், 86,000 பேரால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது கடந்த ஆண்டு (2024) 345,000 ஆக பதிவாகியதாக குறிப்பிடப்படுகிறது.
புகலிட அமைப்பை சீர்திருத்துவதை நோக்கமாகக் கொண்ட புதிய திட்டங்களை அரசாங்கம் அறிவித்த பிறகு இந்த புள்ளிவிபரம் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் புகலிட நிலை மற்றும் புலம்பெயர்ந்தோரின் சலுகைகளைப் பெறுவதற்கான உரிமைகளின் வரம்புகள் குறித்த மதிப்பாய்வும் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில் 257,000 பிரித்தானியர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும், 143,000 பேர் வெளிநாடுகளில் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த புள்ளிவிபரங்கள் நிலையானவை அல்ல எனவும் கணக்கெடுப்பில் வராத சிலர் பிரித்தானியாவில் தங்கியிருக்கலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




