பயிற்சியின் போது CSK வீரருக்கு நேர்ந்த பயங்கரம்..
வங்கதேச பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்காக பயிற்சியில் ஈடுபட்டிருந்த முஸ்தபிசுர் ரஹ்மான் தலையில், பந்து பட்டு ரத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் IPL கிரிக்கெட் தொடரை போலவே, வங்கதேசத்தில் வங்கதேச பிரிமியர் லீக் (PPL) கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் அந்நாட்டு வீரர்கள் உட்பட பல வெளிநாட்டு வீரர்களும் விளையாடி வருகின்றனர். இந்த தொடரில் உள்ள கமிலா விக்டோரியன்ஸ் அணிக்காக அந்நாட்டு பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் விளையாடி வருகிறார். இவர் IPL தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றார்.
இந்நிலையில் இன்று கமிலா விக்டோரியன்ஸ் அணியினர், தாகா மைதானத்தில் வலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மற்றொரு வீரரான லிட்டன் தாஸ் அடித்த பந்து எதிர்பாராத விதமாக முஸ்தஃபிஷர் ரஹ்மான் தலையின் இடதுபுறத்தில் பலமாக தாக்கியது. இதில் ரத்த காயம் ஏற்பட்டு முஸ்தபிசுர் ரஹ்மான் மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார். அருகில் இருந்த சகவீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அவரை உடனடியாக மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவருக்கு தலையில் சிடி ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. அப்போது மூளையில் ரத்தக்கசிவு எதுவும் ஏற்படவில்லை எனவும், வெளிப்புற காயம் மட்டுமே உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து தலையில் ஏற்பட்ட காயத்திற்காக அவருக்கு தையல் போடப்பட்டு தொடர் மருத்துவ சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பயிற்சியின்போது முஸ்தபிசுர் ரஹ்மானின் தலையில் பந்து பட்டு, காயம் ஏற்படும் வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வேகமாக பரவி வருகின்றன