Hockey World Cup: போட்டி அட்டவணை வெளியீடு!
ஹாக்கி உலகக் கோப்பை Hockey World Cup தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் 14 முதல் 30 ஆம் திகதிவரை பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறவுள்ளது.
இதில் ஆடவர் பிரிவில் 16 அணிகளும், மகளிர் பிரிவில் 16 அணிகளும் களம் காண்கின்றன. மேற்படி தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய தொடரில் கலந்து கொள்ளும் 16 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஆடவருக்கான போட்டியில் ‘A’ பிரிவில் நெதர்லாந்து, அர்ஜெண்டினா, நியூஸிலாந்து மற்றும் ஜப்பான் ஆகிய அணிகளும் B’ பிரிவில் பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் மலேசியா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
‘C’ பிரிவில் ஆஸ்திரேலியா, ஸ்பெயின் அயர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளும், ‘D’ பிரிவில் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், மற்றும் வேல்ஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
மகளிருக்கான போட்டியில் ‘A’ பிரிவில் நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, சிலி, ஜப்பான் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
‘B’ பிரிவில் அர்ஜெண்டினா, ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்காட்லாந்து அணிகளும் ‘C’ பிரிவில் பெல்ஜியம், ஸ்பெயின், நியூஸிலாந்து, அயர்லாந்து அணிகளும் ‘D’ பிரிவில் சீனா, இங்கிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளும் இடம் பிடித்துள்ளன.
போட்டிகள் லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடத்தப்படுகின்றன.
லீக் சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் இடம் பிடித்துள்ள அணி தனது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றுக்கு முன்னேறும். இந்த 8 அணிகளும் E, F என 2 பிரிவுகளாக பிரிக்கப்படும்.
‘E’ பிரிவில் லீக் சுற்றில் ஏ மற்றும் டி பிரிவில் முதல் 2 இடங்களை தலா 2 அணிகள் என மொத்தம் 4 அணிகள் இடம் பெறும்.
இதேபோன்று F பிரிவில் பி மற்றும் சி பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த தலா 2 அணிகள் என 4 அணிகள் இடம் பெறும். ‘E’ மற்றும் G பிரிவில் இடம் பெற்றுள்ள அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோதும்.
இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறும்.
ஆடவருக்கான போட்டியில் ‘D’ பிரிவில் உள்ள இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் ஆகஸ்ட் 15 ஆம் திகதி வேல்ஸ் அணியுடன் மோதுகிறது. தொடர்ந்து 17ஆம் திகதி இங்கிலாந்துடனும், 19ஆம் திகதி பாகிஸ்தானுடனும் இந்திய அணி விளையாடுகிறது.
மகளிர் பிரிவில் லீக் சுற்றுகள் ஆகஸ்ட் 15 முதல் 20-ம் திகதி வரையும் 2-வது சுற்று ஆட்டங்கள் 21 முதல் 24-ம் திகதி வரையும் நடைபெறுகின்றன.
அரை இறுதி ஆட்டங்கள் 27-ம் திகதி நடைபெறுகின்றன. தொடர்ந்து சாம்பியன் பட்டம் வெல்வது யார்? என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி 29-ம் திகதி நடைபெறுகிறது.
ஆடவர் பிரிவில் அரை இறுதி ஆட்டங்கள் 28-ம் திகதியும், இறுதிப் போட்டி 30-ம் திகதியும் நடைபெறுகின்றன.





