ஓய்வின் பின்னரும் உயரிய பதவி??
பாராளுமன்றத்தில் இருந்து அண்மையில் ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரி ஒருவர் விசேட குழுவொன்றில் உயர் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், ஓய்வூதியத்திற்கு மேலதிகமாக வாகனங்கள் உட்பட சகல வசதிகளையும் முன்னைய பதவியின் முழு சம்பளத்தையும் பெற்றுக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவரது இந்த நடவடிக்கை குறித்து அதிகாரிகள், ஊழியர்கள் பலர் அதிருப்தி வெளியிட்டு வருவதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் பாராளுமன்றத்தில் இருந்து ஓய்வு பெற்ற இந்த அதிகாரி பல நாட்களாக பாராளுமன்றத்திற்கு வருகை தருவதாகவும் ஒவ்வொரு முறை வரும்போதும் பாராளுமன்றத்தில் இருந்து சொகுசு வாகனங்களையும் பெற்றுக் கொள்வதாகவும் தெரியவந்துள்ளது.
மூத்த அரசாங்க அதிகாரி ஒருவரின் ஒப்புதலின் பேரில் அவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அமைச்சர்கள் பலர் அவரது நியமனம் குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை, நாட்டில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இவ்வாறான நியமனங்களை வழங்குவதும் ஏனைய வசதிகளை வழங்குவதும் பாரிய பிரச்சினையாக உள்ளதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.