இந்தோனேசியாவில் கொட்டித் தீர்த்த மழை – 16 பேர் உயிரிழப்பு, அவசரகால நிலை அமுலில்!
இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் இன்று அறிவித்துள்ளனர்.
தற்போது ஆரம்பமாகியுள்ள பருவ மழையால் சியாவ் டகுலாண்டாங் பியாரோ (Siau Tagulandang Biaro) மாவட்டம் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அப்துல் முஹாரி (Abdul Muhari) கூறினார்.
பேரழிவிற்குள்ளான கிராமங்களுக்கு காவல்துறை மற்றும் இராணுவத்தின் ஆதரவுடன் அவசர மீட்புப் பணியாளர்கள் அனுப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
சுமார் நான்கு கிராமங்களில் 07 வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாகவும், 140க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 600இற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சிதாரோ (Sitaro ) மாவட்டத் தலைவர் சின்டியா இங்க்ரிட் கலங்கிட் (Chyntia Ingrid Kalangit) மீட்பு நடவடிக்கைகளுக்காக 14 நாள் அவசரக் காலத்தை பிறப்பித்துள்ளார்.





