ஜப்பானில் கனமழையால் ஒருவர் உயிரிழப்பு; ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்
ஜப்பானின் வடக்குப் பகுதியில் பெய்த கனமழையால் ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஆறுகள் கரையுடத்ததாகவும் பாலங்களும் கார்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் அதிகாரிகளும் ஊடகங்களும் ஜூலை 26ஆம் திகதி வெளியிட்ட தகவல்கள் கூறுகின்றன.ஹொன்ஷு தீவில் ஒருவர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. மேலும் நால்வரைக் காணவில்லை.
யுசாவா நகரில் சாலைப் பணிகள் நடைபெற்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவை அடுத்து 60 வயது மதிக்கத்தக்க நபரை காணவில்லை. அகிதா நகரில் ஆறு ஒன்று கரையுடத்ததை அடுத்து 86 வயது நபரைக் காணவில்லை என்று காவல்துறை ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது.அகிதா நகரில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக ஊடகங்கள் கூறுகின்றன.
யமகதா பகுதியில் இரண்டு ஆறுகள் கரையுடைத்ததாகவும் அங்கு காணாமற்போன ஒருவரைத் தேடச் சென்ற காவல்துறை அதிகாரிகள் இருவரையும் காணவில்லை என்றும் அதிகாரிகள் கூறினர்.
யமகதா வட்டாரத்தின் இரண்டு பகுதிகளில் 24 மணி நேரத்தில் ஆக அதிகமான மழை பதிவாகியுள்ளது. ஷிஞ்சோவில் 389 மில்லிமீட்டர் மழையும் சகதாவில் 289 மில்லிமீட்டர் மழையும் பெய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அதிகாரிகள் 200,000க்கும் மேற்பட்டோருக்கு வெளியேற்ற உத்தரவு பிறப்பித்ததாக தீயணைப்பு, பேரிடர் நிர்வாக அமைப்பு கூறியது.கிட்டத்தட்ட 4,000 பேர் தற்காலிகத் தங்குமிடங்களுக்கு வெளியேற்றப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.ஏறக்குறைய 3,060 வீடுகளுக்கு மின்சார விநியோகம் தடைபட்டுள்ளது. 1,100 வீடுகளுக்கு தண்ணீர் விநியோகம் தடைபட்டுள்ளது.
சாலைகள் வாகனப் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளன. அதிவேக ரயில்சேவையான ஷின்கன்சென் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. காவல்துறை, தீயணைப்புத் துறையினருக்கு மீட்புப் பணிகளில் உதவ ராணுவம் அனுப்பப்பட்டுள்ளது என்று அரசாங்கப் பேச்சாளர் கூறினார்.இவ்வேளையில் அடுத்த மூன்று நாள்களுக்கு அன்றாடம் 100 மில்லிமீட்டர் முதல் 200 மில்லிமீட்டர் வரையிலான மழை தொடரும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது