இலங்கையில் பொதுத் தேர்தலை நடத்துமாறு ரணிலுக்கு கடும் அழுத்தம்!
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர்பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதனை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடமும் அவர் வலியுறுத்தியுள்ளார். என்றாலும், பொதுத் தேர்தலை முதலில் நடத்தும் நிலைப்பாட்டில் ரணில் இல்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, கூறியுள்ளார்.
ஆனால், பொதுத் தேர்தலை முதலில் நடத்தும் தீர்மானத்தில் இருந்து பின்வாங்க போவதில்லையென பசில் ராஜபக்ச கட்சியின் முக்கியஸ்தர்களிடம் வலியுறுத்தியுள்ளதாக தெரிய வருகிறது.
இந்த நிலையில், படுதோல்வியை தவிர்ப்பதற்காகவே முன்கூட்டியே பொதுத்தேர்தலை நடத்துமாறு பஸில் ராஜபக்ச கோருகின்றார்.
ஆனால், எந்த தேர்தல் நடந்தாலும் பொதுஜன பெரமுனவால் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது என பிவிருது ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினரான உதய கம்மன்பில தெரிவித்தார்.
“மொட்டு கட்சிக்கு ஆதரவு உள்ளது. மக்கள் உள்ளனர் என்றெல்லாம் அக்கட்சியினர் மாயையை உருவாக்கிவருகின்றனர்.
ஜனாதிபதித் தேர்தலில் படுதோல்வி ஏற்படும் என்பது பசிலுக்கு தெரியும். எனவே, ஜனாதிபதித் தேர்தல் முதலில் நடத்தப்பட்டால் நாடாளுமன்ற தேர்தலுக்கு வேலை செய்வதற்கு எவரும் இருக்கமாட்டார்கள்.
அதனால் மொட்டு தரப்பினரும் மேலும் பின்னடைவு ஏற்படும். இதனாலேயே நாடாளுமன்றத்தில் சில ஆசனங்களை தக்கவைத்துக்கொள்ள முன்கூட்டியே பொதுத்தேர்தல் கோரப்பட்டுள்ளது.