லண்டன் மக்களை வதைக்கும் வெப்பம் – இதுவரை இல்லாத அளவுக்கு பதிவு
பிரித்தானிய தலைநகர் லண்டனில் இந்தாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் அதிகபட்சமாக சனிக்கிழமை 30 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
தகிக்கும் வெப்பத்தை தாங்க முடியாமல், மேற்கு லண்டனிலுள்ள ஹாமர்ஸ்மித் நகர மக்கள், தேம்ஸ் நதிக்கரையோரம் தஞ்சமடைந்தனர்.
தேம்ஸ் நதிக்கரையோரம் ஓய்வெடுப்பதோடு, படகுகளில் சென்றும் அவர்கள் பொழுதை போக்கினர்.
லண்டனில் கடும் வெப்பத்துக்கு மத்தியில் நடந்த அரச படை அணிவகுப்பு ஒத்திகை ஒன்றில் மூன்று வீரர்கள் மயங்கி வீழ்ந்தனர்.
அடுத்த வாரம் நடைபெறவுள்ள அரசரது பிறந்த நாள் விழா அணிவகுப்புக்கான ஒத்திகை நேற்று சனிக்கிழமை சென் ஜேம்ஸ் பூங்காவில் இடம்பெற்றது. வேல்ஸ் இளவரசர் வில்லியமும் அதில் கலந்துகொண்டு பார்வையிட்டார்.
நூற்றுக்கணக்கான குதிரைக் காவல் படை வீரர்கள் பங்கேற்ற அந்த ஒத்திகையின் போதே குறைந்தது மூன்று வீரர்கள் மயங்கி வீழ்ந்தனர்.
மேலும் சிலர் கடும் வெப்பத்தால் களைப்புற்றனர். மயங்கிய வீரர்கள் சிகிச்சைக்காக வெளியே சுமந்து கொண்டுசெல்லப்பட்டனர்.