”அவர் தவறு செய்தார், அதன் விளைவாக முடிவை எய்தினார்” – புட்டின்!
வாக்னர் கூலிப் படையின் தலைவரான யெவ்கெனி பிரிகோஜின் விமான விபத்தில் உயிரிழந்துள்ள நிலையில், அவரது மரணம் தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கருத்து வெளியிட்டுள்ளார்.
இது குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய புட்டின், பிரிகோஜினின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிதித்தார். அத்துடன், அவர் ஒரு திறமையான தொழிலதிபர் என்று புட்டின் பாராட்டினார்.
விபத்து தொடர்பில் இறந்ததாக நம்பப்படுகின்ற 10 பேரின் எச்சங்களை புலனாய்வாளர்கள் இன்னும் உறுதியாக அடையாளம் காண வேண்டும் என்றும், ஆய்வுக்கு நேரம் எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உண்மையில், உக்ரைனில் நவ-நாஜி ஆட்சியை எதிர்த்துப் போராடுவதற்கான எங்கள் பொதுவான காரணத்தில் வாக்னர் குழுவினர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார்கள் என்பதை கவனிக்க விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதை நாங்கள் நினைவில் கொள்கிறோம், நாங்கள் மறக்க மாட்டோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ப்ரிகோஜின் ஒரு திறமையான நபர், திறமையான தொழிலதிபர், அவர் நம் நாட்டில் மட்டுமல்ல, வெளிநாட்டிலும், குறிப்பாக ஆப்பிரிக்காவிலும் பணிபுரிந்தார். அவர் எண்ணெய், எரிவாயு, விலைமதிப்பற்ற உலோகங்கள் மற்றும் கற்கள் ஆகியவற்றில் ஈடுபட்டார் எனவும் அவர் கூறினார்.
முன்னதாக பிரிகோஜின் ரஷ்யாவின் இராணுவத் தலைமைக்கு எதிராக ஒரு கலகத்தை நடத்தி சரியாக இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த விபத்து ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.