மஹிந்தவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதா?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பாக ஜனாதிபதி அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது.
அந்த செய்திகள் அனைத்தும் பொய்யானவை என்றும் 1986 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க ஜனாதிபதிகளின் உரிமைச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி அலுவலகம் அவருக்கான பலன்களை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவிக்கின்றது.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஓய்வு பெற்ற ஜனாதிபதி ஒருவரின் ஓய்வூதியத்துக்கும், கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் செயலக கொடுப்பனவுக்கும் உரித்துடையவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு 03 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், அதற்காக மாதாந்த எரிபொருள் கொடுப்பனவாக 1950 லீற்றர் வழங்கப்படுவவதாகவும் அந்த வாகனங்களுக்காக மூன்று சாரதிகள் வழங்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கான பாதுகாப்பு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்படுகிறது.
அதற்காக நியமிக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்களில் மூன்று கொமாண்டோ அதிகாரிகள், 37 ஏனைய சிப்பாய்கள் மற்றும் 4 இதர பிரிவு அதிகாரிகளும் 19 இதர நிலைகளும் இருப்பதோடு இவ்வாறு மொத்தம் 07 இராணுவ அதிகாரிகள் மற்றும் 56 ஏனைய சிப்பாய்களும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக சேவையில் ஈடுபட்டுள்ள இராணுவ வீரர்களுக்கு மேலதிகமாக 180 இற்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் 29 பொலிஸ் சாரதிகளும் உள்ளனர் என்றும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை மதிப்பிடுவதற்கு தற்போது அமைச்சரவை உபகுழுவும் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் இது தொடர்பாக தீர்மானங்கள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.