ஹாவர்டு பல்கலைக்கழக விவகாரம்: ட்ரம்ப் நிர்வாகம் விதித்த உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை

ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வெளிநாட்டு மாணவர்களைச் சேர்க்கும் உரிமையை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் நிர்வாகம் ரத்து செய்யப்போவதாக அறிவித்தது.அந்த நடவடிக்கையைத் தடுக்கும் விதமாக அமெரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவை எதிர்த்து வெள்ளிக்கிழமை (மே 23) பாஸ்டன் நீதிமன்றத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது.
அமெரிக்க அரசு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்குச் செய்வது சட்டவிரோதமான ஒன்று அது சட்டங்களை மீறுவதாகப் புகாரில் குறிப்பிடப்பட்டது.மேலும் 7,000க்கும் அதிகமான மாணவர்களின் விசாக்கள் ரத்து செய்வது குறித்தும் ஹார்வர்ட் முறையிட்டது.
“ஓர் உத்தரவு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் 25 விழுக்காடு மாணவர்களின் எதிர்காலத்தை அழித்துவிடும். அனைத்துலக மாணவர்கள் ஹார்வர்டுக்கு மிகப்பெரும் பலம்,” என்று புகாரில் பல்கலைக்கழகம் குறிப்பிட்டது.இதை விசாரித்த நீதிபதி அலிசன் புர்ரோ, டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவைத் தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டார்.
அமெரிக்கக் கல்விக் கழகங்களில் அமெரிக்காவுக்கு எதிரான இடதுசாரி சித்தாந்தங்கள் பேரளவில் பரவி வருவதாக அதிபர் டிரம்ப் குறைகூறி வருகிறார்.
அண்மைய வாரங்களில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட இருந்த கிட்டத்தட்ட 3 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமானமுள்ள மானியங்களை அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசாங்கம் முடக்கியுள்ளது.
தற்போது ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள வெளிநாட்டு மாணவர்கள் வேறு பல்கலைக்கழகத்திற்கு மாற வேண்டும் என்றும் அல்லது அவர்களின் விசா ரத்து செய்யப்படும் என்றும் டிரம்ப் நிர்வாகம் மிரட்டல் விடுத்துள்ளது.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் வெளிநாட்டு மாணவர் சேர்க்கை உரிமம் எப்படி ரத்து செய்யப்பட்டதோ அதேபோல் மேலும் சில பல்கலைக்கழகங்களின் வெளிநாட்டு மாணவர் சேர்க்கைக்கான உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் டிரம்ப் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
அமெரிக்க அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு கேம்பிரிட்ஜ், மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.இது சட்டவிரோதமான நடவடிக்கை, இது பல்கலைக்கழகத்தையும் நாட்டையும் பாதிக்கும் என்று அவை விமர்சித்து உள்ளன.