சட்டவிரோத துப்பாக்கிகளை ஒரு வாரத்துக்குள் ஒப்படைக்க வேண்டும்: பங்களாதேஷ் அரசு
ஓரு வாரத்துக்குள் அனைத்து சட்டவிரோத துப்பாக்கிகளை அருகில் உள்ள காவல்நிலையத்தில் ஒப்படைக்குமாறு போராட்டக்காரர்களை வங்கதேச அரசு வலியுறுத்தியுள்ளது.
வங்கதேச இடைக்கால அரசின் உள்துறை ஆலோசகர் பிரிகேடியர் ஜெனரல் எம். சகாவத் ஹுசைன் இன்று (திங்கள்கிழமை), மாணவர் போராட்டத்தின்போது காயமடைந்த ராணுவ வீரர்களை மருத்துவமனைக்குச் சென்று பார்த்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “போராட்டத்தின்போது போராட்டக்கார்கள் காவல்நிலையங்களில் இருந்து துப்பாக்கிகளை எடுத்துச் சென்றுள்ளனர்.
அந்த அனைத்து ஆயுதங்களையும் அவர்கள் ஒரு வாரத்துக்குள் அருகில் உள்ள காவல்நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். ஒப்படைக்கப்படாவிட்டால், அதிகாரிகள் சோதனை மேற்கொள்வார்கள். யாரேனும் அங்கீகரிக்கப்படாத ஆயுதங்களை வைத்திருந்தால், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும்.
வீடியோ ஒன்றில் இளைஞர் ஒருவர் 7.62 மிமீ துப்பாக்கியை எடுத்துச் செல்வது காணப்பட்டது. அவர் துப்பாக்கியை திருப்பிக் கொடுக்கவில்லை. நீங்கள் அச்சத்தின் காரணமாக ஒப்படைக்கவில்லை என்றால், துப்பாக்கிகளை வேறு யாரிடமாவது ஒப்படைக்கவும்.
ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சிவில் உடையில் இருந்த இளைஞர்களை அடையாளம் காண விசாரணை நடத்தப்படும். போராட்டத்தின் போது மாணவர்கள் உட்பட சுமார் 500 பேர் கொல்லப்பட்டனர். பல ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர்” என தெரிவித்தார்.
தவறான செய்திகளை வெளியிட்டால் அல்லது ஒளிபரப்பினால் ஊடகங்கள் மூடப்படும் என நேற்று தான் கூறியது குறித்து விளக்கம் அளித்த சகாவத் ஹுசைன், “நான் கோபத்தில் சொன்னேன். அது என் வேலை இல்லை. எந்தவொரு ஊடகத்தையும் மூடுவதை நான் ஒருபோதும் ஆதரிக்கவில்லை” என்று தெரிவித்தார்.
வங்கதேச அரசு வழங்கிய இட ஒதுக்கீட்டுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் இல்லத்தை முற்றுகையிட முயன்றனர். இந்த போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து கடந்த 5ம் திகதி ஷேக் ஹசீனா, பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பி இந்தியாவுக்கு வந்தார்.
இதையடுத்து கடந்த 8ம் திகதி இடைக்கால அரசு பொறுப்பேற்றது. இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பதவியேற்றார். அரசை நிர்வகிக்க யூனுஸுக்கு உதவ 16 பேர் கொண்ட ஆலோசகர்கள் குழுவும் பதவியேற்றுக்கொண்டது.