மீண்டும் தென்கொரியாவின் இடைக்கால அதிபராக ஹான் டக் சூ நியமனம்

தென்கொரிய அரசமைப்பு நீதிமன்றம் பிரதமர் ஹன் டக் சூவை மீண்டும் அதிபர் பதவியில் நியமித்துள்ளது. கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குமுன் அரசியல் குற்றச்சாட்டைத் ஹன் எதிர்கொண்டார்.
ராணுவச் சட்டத்தை அமல்படுத்த முயன்ற அதிபர் யூன் சுக் இயோல்மீது அரசியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதை அடுத்து ஹன் தென்கொரியாவின் இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டார்.இரண்டு வாரங்களுக்குள் ஹன்னும் அரசியல் குற்றச்சாட்டை எதிர்கொண்டு அதிபர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
அரசமைப்பு நீதிமன்றத்தில் மேலும் மூன்று நீதிபதிகளை நியமிக்காததை அடுத்து எதிர்க்கட்சி வசமுள்ள நாடாளுமன்ற ஹன்மீது அரசியல் குற்றச்சாட்டைச் சுமத்த முடிவெடுத்தது.
தற்போது மீண்டும் அதிபர் பதவியில் நியமிக்கப்பட்டதற்கு அரசமைப்பு நீதிமன்றத்துக்கு நன்றிக்கடன்பட்டிருப்பதாக ஹன் தெரிவித்துள்ளார்.பணிநீக்கம் செய்யப்பட்ட காலத்தில் தொடர்ந்து கடினமாக உழைத்ததாக அமைச்சரவைக்கு அவர் நன்றி கூறினார்.
“அனைத்துலக மாற்றங்களை எதிர்கொள்ள தொடர்ந்து இணைந்து தயாராவோம். புவிசார் அரசியல் உருமாறிவரும் நிலையில் தென் கொரியா நன்கு வளர்வதை உறுதிசெய்வோம்,” என்று தொலைக்காட்சி உரையில் ஹன் குறிப்பிட்டார்.
அரசமைப்பு நீதிமன்றத்தில் எட்டில் ஐந்து நீதிபதிகள் திரு ஹன்மீது சுமத்தப்பட்ட அரசியல் குற்றச்சாட்டு சரி என்று குறிப்பிட்டனர். இருந்தபோதும் அவர் அரசமைப்புச் சட்டத்தை மீறவில்லை என்பதால் ஹன்மீது குற்றம் சுமத்த போதுமான சான்று இல்லை என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறினர்.
75 ஹன் ஐந்து அதிபர்களின்கீழ் ஏறக்குறைய 30 ஆண்டுகளில் வெவ்வேறு தலைமைத்துவ பொறுப்புகளில் சேவையாற்றியுள்ளார்.ஆனாலும் ராணுவச் சட்டத்தை அறிவித்த யூனைத் தடுக்க ஹன் போதுமான முயற்சிகள் எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை வகிக்கும் நாடாளுமன்றம் கூறியது.ஹன்னை அதிகாரிகள் விசாரித்தப்போது நிதியமைச்சர் சொய் சங் மொக் இடைக்காலப் பிரதமராக இருந்தார்.
இந்நிலையில், அதிபர் யூன் சுக் இயோல்மீதான அரசியல் குற்றச்சாட்டு குறித்த தீர்ப்பை தென்கொரிய அரசமைப்பு நீதிமன்றம் வெளியிட தயாராகிவருகிறது.அதை முன்னிட்டு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறக்கூடிய பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்கும்படி வெளிநாட்டுத் தூதரகங்கள் அதன் குடிமக்களை அறிவுறுத்தி வருகின்றன.
அன்றாட வாழ்க்கைச்சூழல் பெரிய அளவில் பாதிக்கப்படாவிட்டாலும் சோல் நகரில் குவாங்வாமுன், ஹன்னம்-டொங் உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறக்கூடும் என்று சிங்கப்பூர்த் தூதரகம் எச்சரித்துள்ளதுகலவரங்கள் தொடர்பான ஏறக்குறைய 600 இணைய மிரட்டல்களாலும் அதிகரித்துவரும் பேரணிகளாலும் காவல்துறை அதிகாரிகள் உச்சவிழிப்புநிலையில் உள்ளனர்.
ஆஸ்திரேலியா, பிரான்ஸ், எஸ்டோனியா ஆகிய நாடுகளும் தென்கொரியாவில் உள்ள தங்கள் தூதரகங்கள் வழியாகத் தத்தம் நாட்டுமக்களை எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளன.