தசையை விட குடலே முக்கியம்! புரோட்டீன் மோகத்தைக் குறைக்கும் தமிழரின் பாரம்பரியம்.
கடந்த சில ஆண்டுகளாக நிலவி வந்த ‘அதிக புரோட்டீன்’ (High Protein) மோகம் மெல்ல மெல்லத் தணிந்து, மக்கள் மீண்டும் பாரம்பரிய உணவுகளுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். 2026-ஆம் ஆண்டின் புதிய உணவுப் புரட்சியாக ‘குடல் ஆரோக்கியம்’ (Gut Health) உருவாகியுள்ளது.
முக்கியமாக தசை வளர்ச்சியை விட ஆரோக்கியமே தற்போது அவசியமாகிறது. இத்தனை காலம் உடற்பயிற்சி நிலையங்களுக்கு செல்பவர்கள் மற்றும் உடற்பயிற்சி ஆர்வலர்கள் மத்தியில் புரோட்டீன் பவுடர்கள்(Protein powder) மற்றும் சப்ளிமெண்ட்கள் (Supplement) தான் ராஜாவாக இருந்தன.
ஆனால், செயற்கை புரோட்டீன்களால் (Protein) ஏற்படும் சிறுநீரகக் கோளாறுகள் மற்றும் செரிமானப் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வு இப்போது அதிகரித்துள்ளது. இதனால், செயற்கைத் தசை வளர்ச்சியை விட, உடலின் உட்புற உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கு மக்கள் முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியுள்ளனர்.
2026-ல் இலங்கை மற்றும் தென்னிந்தியா மட்டுமின்றி, உலகெங்கிலும் உள்ள ஊட்டச்சத்து நிபுணர்கள் கம்பு, கேழ்வரகு, சாமை மற்றும் திணை போன்ற சிறுதானியங்களை (Millets) பரிந்துரைக்கின்றனர்.
இச்சிறுதானியங்களில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து ((Fiber)) குடல் இயக்கத்தைச் சீராக்கி, ‘நல்ல பாக்டீரியாக்களின்’ (Good Bacteria) வளர்ச்சியைத் தூண்டுகிறது.
இதில் புரோட்டீன் மட்டுமின்றி இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் தாதுக்கள் இயற்கையாகவே நிறைந்துள்ளன.
மருத்துவர்களின் கருத்துப்படி, மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியில் 70% முதல் 80% வரை குடலில்தான் தீர்மானிக்கப்படுகிறது. குடல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே மன அழுத்தம் குறையும், தோல் பொலிவு பெறும் மற்றும் ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும். இதனால்தான் 2026-ன் திட்டமிட்ட உணவு அட்டவணையில் (Diet Chart) புரோட்டீன் ஷேக் (Protein Shake)குகளுக்குப் பதில் கம்மங்கூழும், ராகி கஞ்சியும் இடம்பிடித்துள்ளன.
“உடல்வாகு என்பது வெளியில் தெரிவது மட்டும் முக்கியமல்ல, உள்ளுறுப்புகள் எப்படிச் செயல்படுகின்றன என்பதே முக்கியம். சிறுதானியங்கள் மெதுவாகச் செரிமானமாவதால் இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமலும் பார்த்துக்கொள்கின்றன,” என ஊட்டச்சத்து நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.





