இலங்கையில் தலைதூக்கியுள்ள துப்பாக்கி கலாசாரம்!! 72 நாட்களில் 21 பேர் பலி
இந்த வருடம் நாடு முழுவதும் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனைத் தெரிவித்தார்.
ஜனவரி 1 முதல் இன்று (12) வரை நாடு முழுவதும் 30 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன, அவற்றில் 17 திட்டமிட்ட குற்றக் கும்பல்களால் மேற்கொள்ளப்பட்டவை என அடையாளம் காணப்பட்டுள்ளது.
காணி தகராறு உள்ளிட்ட தனிப்பட்ட காரணங்களுக்காகவே ஏனைய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதன் பின்னர் அவர்கள் மீண்டும் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
அவர்களில் சிலர் மீண்டும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புபட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்நிலையில், சந்தேகநபர்கள் புனர்வாழ்வளிக்கப்படுவதற்கு முன்னர் சமூகமயப்படுத்தப்பட்டமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.