கழுகுப் பார்வையில் கிரீன்லாந்து : வேடிக்கை பார்க்கும் உலக நாடுகள்!
வெனிசுலா மீதான ஆக்கிரமிப்பை தொடர்ந்து ட்ரம்பின் அடுத்த இலக்காக கிரீன்லாந்து மாறியுள்ளது. நேட்டோ மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து தேவை என்று ட்ரம்ப் கூறிவருகிறார். அதனை விட்டு தராவிட்டால் இராணுவ பலத்தை பயன்படுத்துவதையும் அவர் மறுக்கவில்லை. ஆகவே அமெரிக்காவின் அடுத்த இலக்கு கிரீன்லாந்துதான் என்பது தெளிவாக தெரிகிறது.
இதில் ட்ரம்பிற்கு பலம் சேர்க்கும் புதிய விடயம் என்னவென்றால் கிரீன்லாந்து மீது அமெரிக்கா இராணுவ ஆக்கிரமிப்பை தொடர்ந்தாலும் தட்டிக் கேட்கக்கூடிய அளவிற்கு வேறு எந்த நாடுகளுக்கும் பலம்பொருந்தியதாக இல்லை என்பதுதான்.

முன்னதாக வெனிசுலா மீதான ஆக்கிரமிப்பின்போது மன்ரோ கோட்பாட்டை முன்வைத்த ட்ரம்ப், கிரீன்லாந்து விடயத்திலும் இதனை முன்வைக்கலாம். அதேநேரம் வெனிசுலா விடயத்தில் பிரித்தானியா, உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் வெறுமனே பூசி மெழுகுவதுபோல் பேசுவது ட்ரம்பின் திட்டத்திற்கு கூடுதல் பலத்தை அளிக்கிறது.
உதாரணமாக இன்றைய தினம் வெனிசுலா விடயத்தில் ஐரோப்பிய தலைவர்கள் ஒன்றிணைந்து ஒரு கூட்டு அறிக்கையை முன்வைத்திருந்தார்கள். அந்த அறிக்கையில் ஐரோப்பாவிற்கு ஆர்க்டிக்கின், பாதுகாப்பு ஒரு முக்கிய முன்னுரிமையாக உள்ளது, இது சர்வதேச மற்றும் அட்லாண்டிக் கடல்கடந்த பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானது.
ஆர்க்டிக் பகுதி ஒரு முன்னுரிமை என்பதை நேட்டோ தெளிவுபடுத்தியுள்ளது. ஆர்க்டிக்கைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் எதிரிகளைத் தடுக்கவும் பல நட்டு நாடுகளுடன் இணைந்து முதலீடுகளை அதிகரித்துள்ளோம். கிரீன்லாந்து உட்பட டென்மார்க் இராச்சியம் நேட்டோவின் ஒரு பகுதியாகும்.
எனவே, ஆர்க்டிக்கின் பாதுகாப்பை கட்டியெழுப்ப வேண்டியது அமெரிக்கா உட்பட நேட்டோ நட்பு நாடுகளின் கடமையாகும். இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் எல்லைகளை மீற முடியாத தன்மை உள்ளிட்ட ஐ.நா. சாசனத்தின் கொள்கைகளை நிலைநிறுத்துவதன் மூலம் இந்த இலக்கை கூட்டாக அடைய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளன.

ஆக இந்த விடயத்தில் ஐரோப்பிய நாடுகள் கடுமையான எதிர்ப்பை வெளியிடாது என்பதை புரிந்துக்கொள்ள முடிகிறது. எந்த ஐரோப்பிய நாடும் தன்னை வலுக்கட்டாயமாகத் தடுக்க தீவிரமாக முயற்சிக்காது என்பதை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் அறிவார். அத்துடன் தன்னை எதிர்க்கும் நாடுகளுக்கு எதிராக பதிலடி கொடுக்கவும் ட்ரம்ப் தயங்கமாட்டார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
இவை எல்லாவற்றையும் தாண்டி ஐரோப்பிய நாடுகள் எல்லை பாதுகாப்பு விடயத்தில் நேட்டோவை அண்டியே உள்ளன. உக்ரைன் – ரஷ்யா போரால் அதிகரித்து வரும் பதற்றங்களில் ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவை சார்ந்தே இயங்குகின்றன.
ஐரோப்பிய நாடுகள் அமெரிக்கா மீது அழுத்தங்களை அதிகரிக்கும்போது நேட்டோவின் உறுப்புரிமையை இழக்க நேரிடலாம். அல்லது பாதுகாப்பு உத்தரவாதங்களில் புறக்கணிக்கப்படலாம் என்ற அச்சம் ஐரோப்பிய தலைவர்கள் மத்தியில் உள்ளது. இது அமெரிக்காவின் நடவடிக்கைக்கு கூடுதல் பலத்தை அளிக்கிறது.

பிரித்தானியா நேட்டோவில் மிகவும் சக்திவாய்ந்த ஐரோப்பிய இராணுவமாக தன்னைக் காட்டிக் கொண்டாலும், மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. ஏவுகணைகள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்ற அணு ஆயுதங்களில் ஒரு தனித்துவமான கூட்டாண்மை மூலம், குறிப்பாக அமெரிக்காவுடனான “சிறப்பு உறவிலிருந்தே தன்னை தற்காத்துக்கொண்டுள்ளது என்பது தவிர்க்க முடியாத உண்மை.
ஆகவே அமெரிக்கா கிரீன்லாந்தை ஆக்கிரமிக்க முயற்சித்தாலும், ஏனைய நாடுகளால் வெறுமனே அல்லது கண்துடைப்பிற்காக எதிர்ப்பை வெளியிட முடியுமே தவிர வேறொன்றையும் செய்ய முடியாது என்பதே அரசியல் அவதானிகளின் கருத்தாக இருக்கிறது.





