“ஈழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குக’! – சுமந்திரன்
“தமிழகத்தில் நீண்ட காலம் தங்கியுள்ள ஈழத் தமிழ் அகதிகள் தங்களுக்கு அங்கேயே வாழ்வுரிமையும் குடியுரிமையும் வழங்கப்பட வேண்டும் என்று விரும்பினால் அதை நாங்களும் வரவேற்று ஆதரிப்போம்.”
– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் M.A. Sumanthiran தெரிவித்திருக்கின்றார்.
புதுடில்லியில் நேற்று மாலை வின்ட்ஸர் பிளேஸில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச நிறுவனத்தின் நாளந்தா மண்டபத்தில் ‘முகம் இல்லா மனிதர்கள் – இந்தியாவில் தமிழ் அகதிகளின் பயணம்’ என்ற தலைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு என விசேடமாக வெளியிடப்பட்ட விவரணத் திரைப்படக் காட்சி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு அவர் கருத்து தெரிவித்தார்.
ஆர்.கே.ராதாகிருஷ்ணனினால் இயக்கப்பட்ட இந்த விவரணத் திரைப்பட நிகழ்வு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு என விசேடமாகக் காட்சிப்படுத்தப்பட்டது.
இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் தி.மு.க. பிரமுகருமான கனிமொழி, ஐ.நா. அகதிகள் தூதரகத்துக்கான பிரதிநிதிகள் உட்படப் பலர் இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தனர்.
அங்கு உரையாற்றிய போது சுமந்திரன் தெரிவித்த முக்கிய கருத்துக்கள் வருமாறு:-
“பொதுவாக இடம்பெயர்ந்த எங்களுடைய ஈழத் தமிழ் அகதிகள் எங்கள் நாட்டுக்கு மீள திரும்பி நமது தாயகத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடு.
அந்தவகையில் இன நெருக்கடியால் இடம்பெயர்ந்து, இந்தியாவில் தங்கியிருக்கும் எமது மக்கள் மீண்டும் எங்களோடு இணைந்து எங்கள் தாயகத்தை மேலும் வலிமைப்படுத்த வேண்டும் என்பதுதான் கொள்கை ரீதியாக எங்களுடைய தீர்மானமாகும்.
ஆயினும் 30 ஆண்டுகளுக்கு மேல் அங்கு வாழ்கின்ற நமது உறவுகள், அங்கேயே பிறந்து அங்கேயே ஒரு தலைமுறைக்கு மேல் வாழ்ந்து விட்ட எமது இரத்தங்கள், தாங்கள் வாழ்ந்த அந்த மண்ணிலேயே வாழ்வுரிமை பெற்று, குடியுரிமை அடைந்து, கௌரவமான வாழ்வைத் தொடர வேண்டும் என்று விரும்பினால் நாம் அதை குறை சொல்ல முடியாது.
அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதுதான் முறையானதாகும். ஆகவே அவர்களது விருப்பத்துக்கு இணங்க இந்த விடயத்தில் தாயகம் திரும்பவும் அல்லது தான் நிலை கொண்டிருக்கும் இந்திய மண்ணிலேயே வாழ்வுரிமை பெறுவதற்கும் அவர்களுக்கு வசதி செய்து கொடுப்பதுதான் நியாயமானது. அவர்களது முடிவுக்கு ஒத்துழைப்பதுதான் சரியானது.
அவர்களில் பலர் தாயகம் திரும்ப விருப்பம் கொண்டுள்ளனர். ஆயினும் அவர்கள் தாயகம் திரும்பும் போது முன்னர் சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறினர் என்ற காரணத்தைக் காட்டி தாயகம் திரும்பும் சமயத்தில் கைது செய்யப்படும் சம்பவங்கள் ஆங்காங்கே இடம்பெற்று வருகின்றன.
அகதிகளுக்கான ஐ.நா. தூதரகத்தின் ஏற்பாட்டில் நாடு திரும்பும் அகதிகளை இத்தகைய காரணம் காட்டி கைது செய்ய முடியாது. கைது செய்யக்கூடாது. அது முறையற்றது.
அதைத் தடுப்பதற்கான நடவடிக்கையை இலங்கை அரசு எடுக்க வேண்டும். அது நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு நிர்வாக நடவடிக்கையாகும்.
ஆனால் அதைச் செய்யாமல் இலங்கை அரசு இழுத்தடிப்பதால் அகதிகளுக்கான ஐ.நா. தூதரகமும் அகதிகளைத் தாயகத்துக்குத் திருப்பி அனுப்பி வைக்கும் நடவடிக்கையை இடைநிறுத்தி வைத்திருக்கின்றது.
இந்த விடயத்தில் முறையாக நடப்பதற்கு கொழும்பு ஆட்சியதிகாரத்தின் மீது முறையான அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும்.” – என்று சாரப்பட சுமந்திரனின் உரை அங்கு அமைந்திருந்தது.




