தொழிற்சங்க போராட்டத்தை தொடரும் அரச வைத்தியர்கள்
சுகாதார அமைச்சினால் இணக்கம் காணப்பட்ட தீர்வுகளை நடைமுறைப்படுத்தத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாளை (26) முதல் நாடு தழுவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் தொடர்ச்சியான தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தீர்மானித்துள்ளது.
தமது கோரிக்கைகளை முன்வைத்து கடந்த இரண்டு நாட்களாக நாடளாவிய ரீதியில் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த வைத்தியர்கள், இன்று (25) காலை 8 மணியுடன் தமது போராட்டத்தை தற்காலிகமாக நிறைவுக்குக் கொண்டு வந்தனர்.
இருப்பினும், வைத்தியர்களின் கோரிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சு வழங்கிய வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இது குறித்து இன்று பிற்பகல் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சங்கத்தின் பிரதிநிதிகள், அதிகாரிகள் மட்டத்திலான மெத்தனப் போக்கினால் நோயாளர்கள் கடும் இன்னல்களைச் சந்தித்து வருவதாகச் சுட்டிக்காட்டினர்.
நாளை ஆரம்பிக்கப்படவுள்ள இந்தத் தொடர் போராட்டத்தினால், நாடு முழுவதும் உள்ள அரச வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவு (OPD) மற்றும் கிளினிக் சிகிச்சைகள் முற்றாகப் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.
எனினும், அவசர சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் உயிர் காக்கும் சிகிச்சைகள் வழமை போன்று முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.





