தைப்பொங்கலை வட மாகாணத்தின் ‘முதன்மைப் பெருவிழாவாக’ மாற்றத் திட்டம்: மன்னாரில் ஆளுநர் அறிவிப்பு
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் ஏற்பாட்டில், ‘வடக்கு மாகாணப் பொங்கல் விழா – 2026’ வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வரம் திருக்கோவில் முன்றலில் இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பாரம்பரிய ‘புதிரெடுத்தல்’ மற்றும் பொங்கலிடும் நிகழ்வுகளைத் தொடர்ந்து நடைபெற்ற மேடை நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அங்கு உரையாற்றிய அவர், எதிர்காலத்தில் கல்வி, சுற்றுலா மற்றும் விவசாய அமைச்சுக்கள் ஒன்றிணைந்து தைப்பொங்கலை மாகாணத்தின் ‘முதன்மைப் பெருவிழாவாக’ கொண்டாட வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் யாழ் விஜயம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்புச் செயற்றிட்டம் குறித்துப் பாராட்டிய ஆளுநர், காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப விவசாயிகள் புதிய தொழில்நுட்பங்களை உள்வாங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மாணவிகளின் கலை நிகழ்வுகளுடன் களைகட்டிய இந்நிழ்வில், கலாமன்றங்கள் மற்றும் விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன. இதில் மாகாண மற்றும் மாவட்ட உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.





