இலங்கை தேர்தல் சட்டத்தை வேண்டுமென்றே மீறிய அரசாங்கம்: தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிப்பு
தற்போதைய அரசாங்கம் தேர்தல் சட்டத்தை வேண்டுமென்றே மீறியமை குறித்து கடுமையான கவலைகளை எழுப்பும் அதே வேளையில், ஜனாதிபதியின் ஆலோசகர்கள் இருவரை நியமிப்பது தொடர்பாக சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை (PAFFREL) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது. .
ஜனாதிபதியின் ஆலோசகர்கள் இருவரை நியமித்துள்ளமை தேர்தல் சட்டத்தை மீறிய செயலாகவும், பொது நிதியை துஷ்பிரயோகம் செய்வதாகவும் அமைந்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
“ஜனாதிபதியின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்ட இருவரும் ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு, தேர்தல் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட ஒரு வேட்பாளரை ஊக்குவிக்கும் தந்திரோபாயமே இந்த நடவடிக்கையாகும்” என அவர் சுட்டிக்காட்டினார்.
“மேலும், இருவருக்குமான வாகனங்கள் உட்பட பலன்கள் பொது நிதியை தவறாக பயன்படுத்துவதாகும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, தேர்தல் பிரசாரங்களுக்கு ஐந்து அமைச்சுக்களின் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், தேர்தல் சட்டத்தை மீறி அரச நிறுவனங்களில் 14 இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
எனவே, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இவ்வாறான செயற்பாடுகளை மன்னிக்க முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.