வெளிநாட்டு மாணவர்களுக்காக இரு சிறப்பு விசாக்களை அறிமுகம் செய்துள்ள இந்தியா அரசு
இந்திய உயர்கல்வி நிலையங்களில் சேர்ந்து பயில விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கென இரு சிறப்பு விசாக்களை இந்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.‘இ-ஸ்டூடன்ட்’, ‘இ-ஸ்டூடன்ட்-எக்ஸ்’ என இருவகை விசாக்களை இந்திய உள்துறை அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆர்வமுள்ள வெளிநாட்டு மாணவர்கள் இந்திய அரசால் தொடங்கப்பட்டுள்ள ‘Study in India’ (SII) இணையவாயிலைப் பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளை மேற்கோள்காட்டி பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
இ-ஸ்டூடன்ட் விசா என்பது SII போர்ட்டலில் பதிவுசெய்யப்பட்ட தகுதியுள்ள அனைத்துலக மாணவர்களுக்கானது. அதேசமயம் இ-ஸ்டூடன்ட்-எக்ஸ் விசா என்பது மாணவர் விசா வைத்திருப்பவர்களுக்கானது.
மாணவர்கள் தனித்தனியாக எஸ்ஐஐ இணையவாயில் அல்லது https://indianvisaonline.gov.in/ மூலம் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம், இருப்பினும், விசா விண்ணப்பத்தின் நம்பகத்தன்மை எஸ்ஐஐ மூலம் சரிபார்க்கப்படும்.எனவே, மாணவர்கள் இந்திய உயர்கல்வி நிலையங்களுக்கு எஸ்ஐஐ இணையவாயில் மூலம் கட்டாயமாக விண்ணப்பிக்க வேண்டும். எந்தவொரு எஸ்ஐஐ பங்காளி நிறுவனங்களிலிருந்தும் சேர்க்கைப் கடிதத்தைப் பெற்ற பிறகு, மாணவர்கள் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்தியாவால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை, பிஎச்டி மற்றும் பிற பாடத்திட்டங்களில் வழக்கமான, முழுநேர படிப்புகளைத் தொடர விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இ-ஸ்டூடன்ட் விசா ஐந்து ஆண்டுகள் வரை வழங்கப்படும். பாடத்திட்டக் காலத்தின் அடிப்படையில் விசா நீட்டிக்கப்படலாம். கூடுதலாக, செல்லுபடியாகும் இ-ஸ்டூடன்ட் விசாவைக் கொண்ட மாணவர்கள் எந்தவொரு குடியேற்ற சோதனைச் சாவடியிலிருந்தும் இந்தியாவிற்குள் நுழைய முடியும் என்று அறிக்கை மேலும் கூறியது.
சட்டம், துணை மருத்துவம், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், மேலாண்மை, வேளாண்மை, அறிவியல், கலை மற்றும் மனிதநேயம், மொழிக்கல்வி, வணிகம் என 8000க்கும் மேற்பட்ட பல்வேறு படிப்புகளை வழங்கும் 600 பங்காளி நிறுவனங்கள் மூலம் இந்தியாவில் உயர்கல்வி பயில விரும்பும் அனைத்துலக மாணவர்களுக்கு உதவும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.