வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
வெளிநாடுகளில் வேலை செய்யும் இலங்கைத் தொழிலாளர்களின் சேமநலன்களை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முதன்மைக் கடமையென அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதற்காக, கூடுதலான அனுகூலங்களைத் தரக்கூடிய விசேட பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்படுமென அமைச்சர் கூறினார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, விசேட ஞாபகார்த்த முத்திரையின் முதல் நாள் உரையை வெளியிடும் நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சி வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் இடம்பெற்றது.
நீண்டகால உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில், வெளிநாடுகளில் வேலைசெய்யும் இலங்கையர்களுக்கு வாக்குரிமையையும் பெற்றுத்தரப் போவதாகவும் அமைச்சர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இஸ்ரேல் அரசுடன் ஏற்படுத்திய புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம் அந்நாட்டில் உள்ள தொழில்வாய்ப்புகளுக்கு இலங்கையர்கள் அனுப்பப்படுகிறார்கள். சட்டவிரோதமான வழிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.





