இலங்கைக்கு அமெரிக்கா வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்
அமெரிக்க மக்களிடமிருந்து 24.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை (ரூ. 7.2 பில்லியன்) வழங்குவதற்கான ஒரு மேலதிக உறுதிப்பாட்டினை அறிவிப்பதில் அமெரிக்கத் தூதரகம் மகிழ்ச்சியடைகிறது.
இலங்கை மக்கள் மற்றும் அவர்களுடனான எமது பங்காண்மை ஆகியவற்றில் நாம் நீண்டகாலமாக மேற்கொள்ளும் முதலீட்டை மேலும் அதிகரிப்பதற்காக இந்த உதவி தொகை அறிிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் (USAID) ஆசிய பணியகத்திற்கான உதவி நிர்வாகியான மைக்கல் ஷிஃபர் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது நிதியமைச்சில் இடம்பெற்ற ஒரு நிகழ்வில் இந்த மேலதிக நிதியளிப்பு தொடர்பான அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டது.
வௌ்ளிக்கிழமை இடம்பெற்ற அந்நிகழ்வில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹவுடன் USAIDஇன் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான செயற்பணிப் பணிப்பாளர் கெப்ரியல் கிராவும் கலந்து கொண்டார்.
USAIDஇற்கும் இலங்கை அரசாங்கத்திற்குமிடையிலான அபிவிருத்தி நோக்கத்திற்கான மானிய ஒப்பந்தத்தினூடாக உறுதியளிக்கப்பட்ட இந்நிதியானது இலங்கையின் சந்தை உந்துதலால் ஏற்படும் பொருளாதார வளர்ச்சியை பலப்படுத்தும், சுற்றுச்சூழலின் நிலைபேறான தன்மை மற்றும் அதன் மீண்டெழும் தன்மை ஆகியவற்றைப் பேணி வளர்க்கும் மற்றும் நல்லாட்சி நடைமுறைகளை ஊக்குவிக்கும்.