சிங்கப்பூரில் 29,000 தாதிகளுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்
சிங்கப்பூரில் 29,000 தாதியருக்கு ஏறக்குறைய 100,000 வெள்ளி வரை வழங்குதொகை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுச் சுகாதாரத் துறையில் பணியாற்றும் தாதியர்களை நீண்டகாலத்திற்கு தக்கவைத்துக் கொள்ளும் திட்டத்தின் கீழ் அடுத்த இருபது ஆண்டுகளில் இந்த உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.
தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் பிப்ரவரி 20ஆம் திகதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சுகாதார அமைச்சர் ஓங் யி காங் இதனை அறிவித்தார்.
‘ஏஞ்சல்’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் தாதியர்களை தக்கவைத்துக் கொள்ளும் திட்டம் செப்டம்பரில் தொடங்கப்படும்.
இந்தத் திட்டத்தின்கீழ் பொதுச் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களில் பணியாற்றும் புதிய, ஏற்கெனவே பணியில் உள்ள 46 வயதுக்குட்பட்ட தாதியர்களுக்கு ஒவ்வொரு நான்கு முதல் ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்குதொகையைப் பெறுவர். ஒவ்வொரு வழங்குதொகையும் 20,000 வெள்ளி முதல் 30,000 வெள்ளி வரை இருக்கும்.
தாதியர்கள் பணியில் இருக்கும் அடுத்த 20 ஆண்டுகளில் அல்லது நடைமுறையில் உள்ள ஓய்வு பெறும் வயது வரை அவர்களுக்கு மொத்தமாக $100,000 வரை கிடைக்கும் சாத்தியம் உள்ளது.
இவ்வாண்டு செப்டம்பரில் அல்லது அதற்குப் பிறகு குறைந்தது நான்கு ஆண்டுகள் தொடர்ந்து பணியில் இருக்கும் வெளிநாட்டுத் தாதியர்களும் அதே அளவு வழங்குதொகைக்குத் தகுதிபெறுவர்.