புனித வெள்ளி தினத்தின் சிறப்பு
மண்ணில் வாழும் உயிர்களுக்காக தன் உயிரை கொடுத்தவர் தான் இயேசு கிறிஸ்து. மனித குலம் மீது கொண்ட அன்புக்கும், பரிவுக்கும், இரக்கத்திற்கும் உச்சக்கட்டமாக தம்மையே பரிகார பலியாக்கி இன்னுயிர் நீத்தவர் தான் இயேசு கிறிஸ்து.
சிலுவையில் அறைந்த இயேசுவை கண்டவர் பலரும் திகைப்புற்று நின்றனர். தன்னுடைய தோற்றம் பெரிதும் உருக்குலைந்து மனித சாயலில் இல்லாமல் போனதையும் பலரால் இகழப்பட்டதையும் மனிதர்களால் புறக்கணிக்கப்பட்டதையும் எண்ணி வேதனை அடைந்த மனிதராய் இயேசு கிறிஸ்து இருந்தார். காண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில் இயேசு இருந்ததாக சொல்லப்படுகிறது.
உலகமே பாவத்தில் சிக்குண்டு சீர்குலைந்த போது மனித குலத்தை தெய்வ திருமகன் இரட்சித்த நாள் தான் புனித வெள்ளி. இந்நாள் ஒரு பொன்நாள். இந்நாளை ஒவ்வொரு கிறிஸ்தவராலும் மறக்கமுடியாத நாளாக கருத வேண்டும். இவ்வெள்ளியை பெரிய வெள்ளி என்றும் சொல்கின்றனர். சிலுவை அவமானத்தின் சின்னமாகும். ஏனென்றால் அது கொள்ளைக்காரன், கொலைகாரனுக்கு தண்டனை கொடுக்கும் இடமாகும். ஆனால் இயேசு இந்த அவமான சின்னத்தையும் வெற்றிச் சின்னமாக மாற்றி அமைத்தார்.
யூதாசு இயேசுவை முத்தமிட்டு காட்டிக் கொடுக்க 30 வெள்ளிக் காசுகள் பெற்ற நிலையில் அவ்வாறு கைது செய்யப்பட்ட இயேசு முன் பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. குற்றச்சாட்டுகள் முன்னுக்கு பின் முரணாக இருந்தாலும் மக்கள் இயேசு சாக வேண்டும் என விரும்பினர். அதுவரை இயேசுவை பின்தொடர்ந்த சீடர்களும் அவருக்கு தண்டனை கிடைக்க போகிறது என்பதை அறிந்து அச்சத்தில் ஓடி விட்டனர்.
பிலாத்து மன்னன் இயேசுவை என்ன செய்ய வேண்டும் என கேட்க அவரை சிலுவையில் அறைய வேண்டும் என மக்கள் கூச்சலிட தன் பதவி பறிபோகும் என்று அஞ்சிய பிலாத்து மன்னன் இயேசுவின் இரத்த பழியில் தனக்கு பங்கு இல்லை எனக் கூறி கைகளை கழுவினார். அதன் பிறகு படை வீரர்கள் இயேசுவின் ஆடையை அகற்றி முள்கம்பி அவரது தலையில் வைத்து ஒரு கோல் கொண்டு அடித்தனர்.
இயேசுவின் தோல் மீது சிலுவையை சுமத்தி கல்வாரி குன்றில் இயேசுவை அறைந்தனர். இயேசுவின் வலது புறமும் இடது புறமும் குற்றவாளிகளை சிலுவையில் அறைந்தனர். அப்போது இயேசு முதல் வாசகத்தை கூறினார். தந்தையே இவர்களை மன்னியும். தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்கு தெரியவில்லை என்றார். இதில் மொத்தமாக ஏழு வாசகங்களை கூறியுள்ளார்.
ஏழாவது வாசகத்தில் இயேசு பிதாவே என் ஆவியை உன்னிடம் தருகிறேன் என சத்தமாக சொல்லி தனது ஜீவனை விட்டார். இயேசு உயிர் திறந்த சிலுவை கிறிஸ்துவர்களுக்கு தனி அடையாளமாக மாறியது. எனவே பெரிய வெள்ளிக்கிழமையன்று சிலுவைக்கு வணக்கம் செலுத்தவே அனைத்து கிறிஸ்தவர்கள் எரியும் மெழுகுவர்த்தியை கைகளில் வைத்திருக்க நடுவே சிலுவை பவனியாக கொண்டு வரப்படும்.
புனித வெள்ளியை தூய்மையான இதயத்துடன் நினைத்து மனதார ஜெபிக்க வேண்டும் எனவும் செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்போம் எனவும் கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர்.