இத்தாலியிலுள்ள பிரபல ஏரி ஒன்றில் தங்க மீன்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து
இத்தாலியில் பிரபலமான சுற்றுலாத்தலமான ட்ரெண்டினோ பகுதியில் உள்ள லோப்பியோ ஏரியில் தங்க மீன்கள் (Goldfish) ஒக்சிஜனுக்காகப் போராடி வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
அந்தப் பகுதியில் உள்ள ஆழமற்ற நீர்ப் பகுதியில் ஆயிரக்கணக்கான தங்கமீன்கள் ஒக்சிஜன் கிடைக்காமையால் உயிரிழப்பதாகத் தெரிய வந்துள்ளது.
அந்தப் பகுதியில் உள்ள மோசமான சூழல் காரணமாக பெரும் தொகை மீன்கள் உயிரிழந்துள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
நீர்நிலையை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கப்பட்ட தங்க மீன்களை, இந்த ஏரியில் விட்டதன் விளைவாக இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுவொரு ஆபத்தான செயல்பாடு என MUSE இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தைச் சேர்ந்த கரோல் தபரெல்லி டி பாடிஸ் (Karol Tabarelli de Fatis) எச்சரித்துள்ளார்.
கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த இந்த மீனினத்திற்கு ஈரநிலமான லோப்பியோ ஏரி பொருத்தமற்றது. இவை அங்குள்ள நீர்வாழ் சூழலின் நிலைத்தன்மைக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, இந்த மீன்கள் இத்தாலிய மரத் தவளை போன்ற அழிந்து வரும் நீர் வாழ் உயிரினங்களின் சிறிய முட்டைகளைச் சாப்பிடுகின்றன. மத்திய ஐரோப்பாவில் மிகவும் அழிந்து வரும் இந்த இனத்தின் கடைசிப் புகலிடங்களில் ஒன்றாக லோப்பியோ ஏரி உள்ள நிலையில், இந்தத் தங்கமீன்கள் நிலைமையை மோசமாக்குகின்றன.
தங்கமீன்களின் அதிக இனப்பெருக்கத் திறனால் நிலைமை மேலும் சிக்கலாகியுள்ளது. இதன் காரணமாக மீன்களைக் காப்பாற்றும் முயற்சியில் அந்தப் பகுதி மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஒக்சிஜன் குறைந்துபோன நீரிலிருந்து தங்க மீன்களை எடுத்துத் தங்கள் தனியார் மீன் தொட்டிகளுக்குக் கொண்டு சென்று காப்பாற்ற முயற்சி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





