இங்கிலாந்தில் திருடப்பட்ட 6 மில்லியன் பெறுமதியான தங்க கழிப்பறை: விசாரணைக்கு முன்னிலையான மூவர்

வின்ஸ்டன் சர்ச்சிலின் பிறப்பிடத்தில் கலைப்பொருளாகக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த 18-கேரட் தங்கக் கழிவறைத் தொட்டியைத் திருடியது தொடர்பில் பிப்ரவரி 24ஆம் திகதிமூன்று நபர்கள் வழக்கு விசாரணைக்கு முன்னிலையாகினர்.
முழுமையாக இயங்கக்கூடிய அந்தக் கழிவறைத் தொட்டியின் பெயர் ‘அமெரிக்கா’. இத்தாலியக் கலைஞர் மௌரிஸியோ கெட்டலேன் உருவாக்கிய அந்தப் படைப்பு, தென் இங்கிலாந்தின் பிளேன்ஹேம் கோட்டையின் சர்ச்சில் குடும்பத்திடமிருந்து களவாடப்பட்டது. இது சுற்றுப்பயணிகளை வெகுவாக ஈர்த்துவரும் ஓர் இடமாக விளங்குவதுடன் யுனெஸ்கோ உலக மரபுடைமைத் தளமாகவும் திகழ்கிறது.
ஐவர் கொண்ட கும்பல் ஒன்று, 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் திகதி திருடப்பட்ட இரு வாகனங்களில் பூட்டப்பட்ட கோட்டை வளாகத்தினுள் அத்துமீறிச் சென்றதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
சன்னலை உடைத்துக்கொண்டு, மரக்கதவை மோதித் தள்ளி, கழிவறையைச் சுவரிலிருந்து பிளந்தெடுத்து ஐந்தே நிமிடங்களில் கட்டடத்தை விட்டு வெளியேறினர் அந்தக் கும்பலில் இருந்தோர்.
கிட்டத்தட்ட 98 கிலோ எடை கொண்ட அந்தக் கழிவறைத் தொட்டி, US$6 மில்லியன் (S$8.01 மி.) மதிப்பில் காப்புறுதிப் பதிவுசெய்யப்பட்டது. கழிவறைத் தொட்டி சிறு சிறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு விற்கப்பட்டிருக்கலாம் என்று அரசாங்கத் தரப்பு தெரிவித்துள்ளது.
வழக்கு விசாரணை நான்கு வாரங்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.