ஈரானில் தங்க தேவை சாதனை அளவுக்கு உயர்வு – உலக தங்கக் குழு தகவல்

உலகின் பல்வேறு பகுதிகளில் தங்கத்திற்கான தேவை குறைவடைந்திருக்கும் நிலையில், ஈரானில் தங்கத்தின் மீதான தேவை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
இஸ்ரேலுடனான 12 நாள் மோதல் பின்னணியில், தங்கத்தை பாதுகாப்பான முதலீடாகக் கருதிய ஈரானியர்கள் அதிக அளவில் கொள்முதல் செய்ததாக உலக தங்கக் குழு தெரிவித்துள்ளது.
தற்போது தங்கத்தின் விலை அதிகரிக்கும் சூழ்நிலையில், ஈரானில் நாணயங்கள் மற்றும் நகைகளுக்கான தேவை கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது, 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஈரானில் தங்க விற்பனை 20 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதே நேரத்தில், உலகளாவிய அளவில் தங்க நாணயங்கள் மற்றும் தங்க பயன்பாட்டுத் தேவை 6 சதவீதம் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானில் நிலைமை முற்றிலும் வித்தியாசமாக உள்ளது. நுகர்வோர் தங்க நகைகளை பாதுகாப்பான முதலீடாகக் கருதி அதிக அளவில் வாங்கியதால், நகைகளுக்கான தேவை 12 சதவீதம் உயர்ந்துள்ளது” என உலக தங்க குழுவின் மூத்த ஆய்வாளர் லூயிஸ் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளார்.
அதற்கப்பால், உலகளாவிய அளவில் தங்க நகைகளுக்கான தேவை 14 சதவீதம் குறைந்திருப்பது குறித்தும் அவர் கவலை வெளியிட்டார். இருப்பினும், கொள்முதல் மதிப்பு 21 சதவீதம் உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.