பனிப்பாறைகள் ஆபத்தில் – ஜெர்மனி நாட்டின் பரப்பளவுக்கு சமமான அளவு உருகியதாக தகவல்

உலகெங்கும் ஜெர்மனி நாட்டின் பரப்பளவுக்கு சமமான அளவு பனிப்பாறைகள் உருகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
1975ஆம் ஆண்டிலிருந்து சுமார் 9,000 கிகா டன் பனிக்கட்டி கரைந்துவிட்டதென உலக பனிப்பாறை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உலகின் 19 பனிப்பாறை பகுதிகளிலும் இதுவரை இல்லாத அளவில் பனிக்கட்டி கரைந்தது புதிய யுனெஸ்கோ அறிக்கையில் தெரியவந்தது.
பனிக்கட்டி தொடர்ந்து கரைவதால் பொருளாதார, சமுதாயப் பிரச்சினைகள் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
உலகில் மொத்தம் 275,000 பனியோடைகளே எஞ்சியிருப்பதாக உலக வானிலை ஆய்வகம் கூறுகிறது.
அன்ட்டார்க்டிக், கிரீன்லந்து பனிப்படலங்களோடு சேர்த்து உலகின் நன்னீர் அளவில் அவற்றின் பங்கு 70 சதவீதமாகும். நன்னீருக்காகப் பனிப்படலங்களை நம்பியிருக்கும் பகுதிகளில் உயரும் வெப்பநிலையால் வறட்சி மோசமாகக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
உருகும் பனியால் பனிச்சரிவுகள், நிலச்சரிவுகள், திடீர்வெள்ளம் ஏற்படும் ஆபத்தும் வீரியமும் அதிகரிக்கக்கூடும். அதனால் மலைப்பகுதிகளில் வாழும் சுமார் 1.1 பில்லியன் மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுவர் என யுனெஸ்கோ அறிக்கை குறிப்பிட்டுள்ளது.